புதுக்கோட்டை ஆண்ட மன்னர்கள் | History Of Pudukkottai

புதுக்கோட்டை: 

வரலாற்று சிறப்பு மிகு புதுக்கோட்டையின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. "ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்" என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது. இன்றைய நிலையில் போர்க்களங்கள் அழிந்துவிட்டன! ஆனால் அவை கூறும் வரலாறு நமது முன்னோர்களின் வீரத்திற்கு வித்தாக உள்ளதை காண்கிறோம்!

தமிழகத்தில் பெருங்கற்கால நாகரிகம் குறித்து படித்தறிய சிறந்த மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். தமிழக நாகரீகக் கூறுகளை தெறிந்து கொள்ள புதுக்கோட்டை வரலாறு பெரிதும் உதவுமென்பதில் ஐயமில்லை. அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. 

சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், முத்தரையர், வேளீர், தொண்டைமான், வாணதிரையர், கொடும்புராயர் ஆகிய அனைத்து வம்சாவழிகளின் ஆட்சியையும் கண்டது இப்பகுதியாகும். இக்காலங்களை அடுத்து அண்மைக்காலம் (1948) வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியதும் புதுக்கோட்டை ஒன்றே!

ஆதிமனிதன்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் (திருமெய்யம்) வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவுமறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

மேலும் உலோகக்காலத்தின் பிற்பகுதியான இரும்புக்கால செம்பு, இரும்பு ஆயுதங்கள், மணிகள், அணிகலங்கள், இறந்தோரைப் புதைத்த புதைகுழிகள்,இறந்தோரின் நினைவுஸ் சின்னங்கள், கல்லறைகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதுக்கோட்டை சார்ந்த பகுதிகளில் கி.மு. 800க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்கால நாகரிகம் தழைத்திருந்தது எனக் கருதப்படுகிறது.

புதுக்கோட்டை வரலாற்றில் தடம் பதித்த சில இடங்கள்: 

கலசமங்கலம் பல்லவர் ஆட்சியில் ஆட்சிப்பீடமாக விளங்கியது. பல்லவராயன் சீமை என்றும் அழைக்கப்பட்டது.  திருக்கோகர்ணம் புதுக்கோட்டையின் புறநகர் பகுதியாகும்.கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயிலும் அருங்காட்சியமும் அமைந்துள்ள இடமாகும். புதுக்கோட்டை அரசின் கலை மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்ந்த இடமாகும். குகைக்கோயில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இது கி.பி. 8ம் நூற்றண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் காலக்கோயில் என்று கருதப்படுகிறது. குகைக்கோயிலுக்கு உள்ள மகாமண்டபமும் மற்ற மண்டபங்களும் பின்னர் ஆண்ட சோழர்,பாண்டியர்,நாயக்கவர்,தொண்டைமான் ஆகிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.

இக்கோயிலில் 11 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுள்ளன. இவற்றுள் பாண்டிய மன்னன் மாறன் சடையன் (கி.பி.781 - 782)காலத்து கல்வெட்டு காலத்தால் முந்தியது என்று அறிகிறோம். ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும், ஹோய்சள மன்னன் வீரநரசிங்கதேவர் விளக்கு எரிக்க கொடை அளித்த செய்தியை மூன்றாம் ராஜராஜன் காலத்து கல்வெட்டும் , விஜயநகர் மன்னர் கிருஷ்ண தேவராயர் பலவிதமான ஆபணங்களை கொடையளித்த செய்தியும் தெரியவருகிறது.

திருக்கோகர்ணத்தை ஒட்டியுள்ள திருவப்பூரில் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோயில் பாழடைந்து போன நிலையில் காணப்படுகிறது. இக் கோயில் இரண் டாம் ராஜராஜன் காலத்தில் (கி.பி.1146 - கி.பி.1163) கட்டப்பட்டது. இங்கு கானப்படும் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 24ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது.

கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. 

கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. 

சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

              ----என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில் (அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

தொல்பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும். புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. 

பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர்.

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்" என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. 

ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன.