அரச குல ஊர்ப்பெயர்கள்

பழந்தமிழ் நாட்டில் பல வகுப்பினர் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அவர்கள் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப்பெயர்களால் விளங்குகின்றன.

நாகர்: 

நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும். தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. இன்னும், கடைச் சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந் தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் நாட்டிலுள்ள நாகப் பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் நாமம் விளங்குகின்றது.  

அருவர்: 

அருவர் என்பார் மற்றொரு குலத்தார். அவர் வாழ்ந்த நாடு அருவர் நாடு  என்று பெயர் பெற்றது. அந்நாடு ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடை நடுவே அமைந்திருந்தது. அன்னாருடன் பழகிய ஆந்திர நாட்டார் தமிழர் எல்லோரையும் அருவர் என்றே குறித்தார்கள். இதற்குச் சான்று கலிங்கத்துப் பரணியில் உண்டு. குலோத்துங்க மன்னன் ஆணைப்படி ஆந்திர தேசத்திலுள்ள கலிங்க நாட்டின் மீது படையெடுத்த தமிழ்ச் சேனையைக் கண்டபோது,

       “ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்
       அருவர் அருவரென அஞ்சி”

ஓடினர் எனப் பரணிக் கவிஞர் பாடியுள்ளார். அருவர் பேசிய தமிழ் மொழியைத் தெலுங்கர் அருவம் என்றார்கள். அதுவே பிற்காலத்தில் அரவம் என்றாயிற்று. அருவர் நாட்டைக் கொடுந் தமிழ் நாடுகளில் ஒன்றாகத் தமிழ் இலக்கண நூலோர் கூறினர். இக் காலத்தில் அருவர் தமிழ் நாட்டிற் காணப்படவில்லை. ஆயினும், திருச்சி நாட்டிலுள்ள அரவக்குறிச்சி என்ற ஊரும், நீலகிரியிலுள்ள அரவங்காடு என்னும் இடமும் அருவரோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.


மழவர்: 

மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர். முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும், தமிழ் இரச குலத்தார்க்கும், உறவு முறையும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக் குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.  

      “மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
      மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே”

என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப் பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.

திரையர்: 

திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது.

முத்தரையர்: 

முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந் தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது. அவரும் சிறந்த படைவீரராக விளங்கினார். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார்
என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு
முத்தரையன் முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும் அக்குலத்தாரது பெருமையைக் காட்டுவனவாகும். 

முனையர்: 

முனையர் என்ற குலத்தாரும் பழந் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர் சிறந்து வாழ்ந்த இம் முனைப்பாடி என்று பெயர் பெற்றது. அவ்வூரைத் தன் அகத்தே கொண்ட நாடு திருமுனைப்பாடி நாடு. தேவாரம்
பாடிய மூவரில் இருவரை ஈந்தது அந் நாடே. சுந்தரர் வாழ்ந்த காலத்தில் நரசிங்க முனையர் என்னும் சிற்றரசன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்ததாகத் திருத் தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது. 

பாணர்: 

பாணர் என்றும், வாணரென்றும் பெயர் பெற்ற குடியினர் பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலம் ஆண்டு வந்தனர். முனையர் பெயரால் முனைப்பாடி எழுந்தாற் போன்று, பாணர் பெயரால் பெரும் பாணப்பாடி உண்டாயிற்று. அதன் தலை நகரம் நிவா நதிக் கரையிலுள்ள திருவல்லம் என்னும் தீக்காலி வல்லம் ஆகும்.வாணபுரம் என்ற மறு பெயரும் அதற்குண்டு. அந் நகரின் அருகே பாண மன்னர் வெட்டிய ஏரியும், அதைச் சார்ந்த ஊரும் வாண சமுத்திரம் என்று பெற்றன. இன்னும், வட ஆர்க்காட்டில் சோழிங்கருக்கு அண்மையிலுள்ள பாணவரம் என்ற ஊரும் பாணர் குடியை நினைவூட்டுகின்றது. 

அதியர்:

தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி
தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ்
இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். அக் கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன. 

ஆவியர்: 

ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக்குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன்
என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன்.  வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் அவனை குறிக்கின்றது. அம் மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று.  
முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் பதி ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி என்பது பழனியின் பெயர்.

ஓவியர்: 

ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இந்நாட்டில் இருந்தனர். சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக் கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன், அவன் ஆட்சி
புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய வர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஓய்மான் நாடென்று சிதைந்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள்
அந் நாட்டைச் சேர்ந்தனவாகும்.

வேளிர்: 

இன்னும், வேளிர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பார் முன்னாளில் சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தாரில் ஒரு வகையார் இருக்குவேளிர் எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள கொடும்பாளூர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளூரிற் பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. இன்னும் சோழ
நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றிருக்கிறது.
 
குறுக்கையர்:

வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் குடியாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் பாட்டால் விளங்குகின்றது, இக் குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள்
சோழநாட்டிற் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். அங்குள்ள வீரட்டானத் திறைவனை,

       “சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த
       கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே”

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்திற் கூறப்படுவது கொறுக்கை
என்னும் பெயர் கொண்டு கும்பகோண வட்டத்தில் காணப்படுகின்றது.

முடி மன்னர் குடி
சோழர்: 

முடியுடை மன்னராய்த் தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேர சோழ பாண்டியர் ஆவர். அன்னார் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள். சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப்  பெற்றிருந்தது.  செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள் சிறந்தனவாம். செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள செம்பிய நல்லூர், பாண்டி நாட்டிலுள்ள செம்பிய னேந்தல் முதலிய ஊர்கள் செம்பியன் பெயரைத் தாங்கி நிற்கின்றன. 

சோழ நாட்டு மன்னர்
விசயாலயன்: 

பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர், விசயாலயன் பெயர்
தாங்கிய ஊர் ஒன்றும் இல்லை யென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழீச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்ததென்பர். 

ஆதித்தன்: 

விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிடமாயிருந்த தொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராஜ கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு.  தஞ்சை நாட்டுப் பண்டார வாடைக்கு அண்மையில் இராஜகிரி என்ற சிற்றூர் உள்ளது.

பராந்தகன்:

தஞ்சைச் சோழர் குடியின் ஆதிக்கத்திற்கு அடிப்படை கோலியவன் பராந்தகமன்னன். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணை யேறிய இம் மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரிந்தான்;
பாண்டிய மன்னனை இரு முறை வென்று, மதுரையைக் கைப்பற்றினான்; மாற்றானுக்கு உதவி செய்த இலங்கை மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்று ஈழ நாட்டையும் கைக்கொண்டான். இவ்வரசனது விருதுப் பெயர்களில் ஒன்று வீர நாராயணன் என்பதாகும். ஆர்க்காட்டு நாட்டில் வீர நாராயணபுரம் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் சில உண்டு.

வளவன் மாதேவி: 

வளவன் மாதேவி என்பாள் பராந்தக சோழனுடைய தேவி. அவள் பெயரால் நிலைபெற்ற சதுர்வேதி மங்கலம் வளவன் மாதேவி என வழங்குவதாயிற்று. தென்னார்க்காட்டு எரும்பூர் என்னும் உருமூர்க் கோயிற்
சாசனத்தால் வளவன் மாதேவி என்ற ஊர் மேற்கா நாட்டைச் சேர்ந்த பிரம தேயம் என்பது விளங்கும். அவ்வூர் இப்பொழுது வளைய மாதேவி என்னும் பெயரோடு சிதம்பரம் வட்டத்தில் உள்ளது. 

உத்தம சீலி: 

உத்தமசீலி என்பான் பராந்தகன் மைந்தருள் ஒருவனாகக் கருதப்படுகின்றான். அவன் பெயரால் அமைந்த உத்தம் சீலி சதுர்வேதி மங்கலம்  என்னும் ஊர் இப்பொழுது உத்தம சேரி என வழங்குகின்றது. 

கண்டராதித்தன்: 

பராந்தக சோழனுக்குப் பின்னே அரசு புரிந்தவன் அவன் மைந்தனாகிய கண்டராதித்தன். ‘ஈசன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்’ என்று கருதி வாழ்ந்த இக் காவலனைச் ‘சிவஞான கண்டராதித்தன்’ என்று சாசனம்
சிறப்பிக்கின்றது. தில்லைச் சிற்றம் பலத்து இறைவன்மீது இம் மன்னன் பாடிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் சேர்த்துப் போற்றப்படுவதாகும். அவ் இசைப்பாட்டில்,

   “காரார் சோலைக் கோழிவேந்தன் தன் தஞ்சையர் கோன் கலந்த
   ஆரா இன்சொற் கண்டராதித்தன்”

என்று வருதலால், அரசாளும் பெருங்குலத்திற் பிறந்தும் அரனடியே தஞ்சமெனக் கருதிய சீலன் இவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சி நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் என்னும் ஊர், இவன் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலம். இம்மன்னனது மறுமை நலங்கருதி அம் மங்கலம் நிறுவப்பட்டதாகத் தெரிகின்றது. இன்னும், கண்டராதித்தன் பெயரால் நிலவும் ஊர் ஒன்று தென்னார்க்காட்டுத் திருக்கோவிலூர் வட்டத்தில் உண்டு. 

செம்பியன் மாதேவி: 

சோழர் குடியில் சீலத்தாற் சிறந்தவள் செம்பியன் மாதேவி. சிவநேசச் செல்வராகிய கண்டராதித்தரின் முதற் பெருந்தேவி என்னும் உரிமைக்குத் தக்க முறையில் அம் மாதேவி செய்த திருப்பணிகள் பலவாகும். தஞ்சை
நாட்டில் செம்பியன் மாதேவி என்ற ஊர் இன்னும் அவள் பெருமைக்கு அறிகுறியாக நின்று விளங்குகின்றது. அங்குள்ள கைலாச நாதர் கோவில் இவளாலே கட்டப்பட்டதாகும். செம்பியன் மாதேவியின் மைந்தனாகிய 
உத்தம் சோழன் அரசு புரிந்த காலத்தில் அவன் தேவியர்கள் அக் கோயிலுக்குப் பல சிறப்புகள் செய்தார்கள்.

அரிஞ்சயன்: 

கண்டராதித்தன் காலம் சென்ற பின்பு, அவன் தம்பியாகிய அரிஞ்சயன் பட்டம் எய்திச் சில காலம் அரசாண்டான். பாண்டியனோடு நிகழ்த்திய போரில் அவன் உயிர் இழந்தான் என்பர். இவ்வாறு அகால மரணமுற்ற அரிஞ்சயன் உயிர் சாந்தி பெறுமாறு பள்ளிப் படையாக இராஜராஜன் அமைத்த ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று பெயர் பெற்றது 

சுந்தர சோழன்:

அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். 

உத்தம சோழன்: 

கண்டராதித்தருடைய திருமகனாய்த் தோன்றிய உத்தம சோழன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவன் பெயரால் எழுந்த ஊர்கள் சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் கொங்கு நாட்டிலும் உண்டு. தஞ்சைநாட்டில் நன்னில வட்டத்தில் உள்ள உத்தம சோழபுரம் என்னும் ஊரும், தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்திற் காணப்படும் உத்தம சோழ மங்கலமும் செங்கற்பட்டு மதுராந்தக வட்டத்திலுள்ள உத்தம நல்லூரும், சேலம் நாட்டிலுள்ள உத்தம சோழபுரமும் இவன் ஆண்ட நாட்டின் பரப்பை ஒருவாறு காட்டுகின்றன. 

இராஜராஜன்: 

உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன் திருமாவளவன் என்று தமிழ் இலக்கியம் கூறுவது போலவே, தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழர் குலத்தைத் தலையெடுக்கச் செய்தவன் இராஜராஜன் என்று சாசனம் அறிவிக்கின்றது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாளத் தொடங்கிய இம் மன்னன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழ் நாட்டின் பெருமையைப்
படிப்படியாக உயர்த்தினான்.

விருதுப் பெயர்கள்:

இம் மன்னனது இயற் பெயர் அருண்மொழித் தேவன் என்பதாகும். இவன் சேர மன்னனையும், பாண்டியனையும் வென்று அடக்கி, மூன்று தமிழ்நாட்டையும் ஒரு குடைக்கீழ் அமைத்தபோது, மும்முடிச் சோழன் என்னும் பெயருக்கு உரியனாயினான்; பின்னர்த் தென் பாலுள்ள இலங்கை என்னும் ஈழ நாட்டையும், வடபாலுள்ள வேங்கை நாடு, கங்கபாடி முதலிய நாடுகளையும், குடபாலுள்ள கொல்லம், குடகம் ஆகிய நாடுகளையும் வென்று, மன்னர் மன்னனாக விளங்கிய போது இராஜராஜன் என்ற விருதுப்
பெயர் பூண்டான். 

அப்பால் கப்பற்படை கொண்டு பன்னீராயிரம் தீவங்களைக் கைப்பற்றி நிலத்திலும் நீரிலும் வெற்றி பெற்று வீறுற்ற நிலையில் ஜயங் கொண்டான் என்னும் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக்கொண்டான். இவன் வீரத்தாற் பெற்ற விருதுகளோடு சீலத்தாற் பெற்ற பெயர்களும் சேர்ந்து அழகுக்கு அழகு செய்தன. “சிவனடி பணியும் செல்வமே செல்வம்” எனக்கொண்ட இராஜராஜன் சிவபாத சேகரன்
என்னும் செம்மை சான்ற பெயர் தாங்கினான். ஈசனார்க்குக் கோயில் எடுத்துப் பணி செய்த பான்மையில் கோச்செங்கட் சோழன் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவன் இராஜராஜன்.

இராஜராஜன் விருதுப் பெயர்களை அவன் ஆட்சியில் அமைந்த மண்டலங்கள் தாங்கி நின்றன. ஈழ மண்டலம் (இலங்கை) மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயர் பெற்றது. தொண்டை மண்டலம் ஜயங்கொண்ட சோழ மண்டல மாயிற்று. பாண்டி மண்டலம் இராஜராஜப் பாண்டி மண்டலம் எனப்பட்டது. 

அருண்மொழி: 

இனி, இவ்வரசன் பெயர் கொண்டு எழுந்ந ஊர்களை முறையாகக் காண்போம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜராஜன், அருண்மொழி வர்மன் என்று குறிக்கப்படுகின்றான். அருண்மொழி என்பது அருமொழி என மருவி வழங்குவதாயிற்று. பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த கானநாட்டில் அருமொழித் தேவபுரம் என்னும் பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம் அறிவிக்கின்றது. இன்னும், தஞ்சை நாட்டிலும், தென்னார்க்காட்டிலும் அருமொழித் தேவன் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு. 

மும்முடிச் சோழன்:

தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் சோழபுரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அதன் முழுப்பெயர் மும்முடிச் சோழபுரம் என்பதாகும். நாஞ்சில் நாட்டில் நாகர் கோவிலுக்கருகே யுள்ள கோட்டாறு, மும்முடிச் சோழ நல்லூர் என முன்னாளில் வழங்கிற்று. தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி, மும்முடிச் சோழபுரம் என்னும் மறுபெயர் பெற்றது. இராஜராஜன் கால முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை அவ்வூர் மும்முடிச் சோழபுரம் என வழங்கிற்று. இன்னும், மும்முடிச் சோழமங்கலம் (திருச்சி), மும்முடிக் குப்பம் (செங்கற்பட்டு), மும்முடிச் சோழகன் (தென்னார்க்காடு) முதலிய ஊர்ப் பெயர்களில் இராஜராஜனது விருதுப் பெயர் விளங்கக் காணலாம். 

இராஜராஜன்:

தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊர் இராஜராஜபுரமேயாகும். நெல்லை நாட்டிலுள்ள இராதாபுரமும் இராஜராஜபுரமே என்று சாசனம் கூறுகின்றது. ஈழநாட்டுப் பாலாவி
நதிக்கரையில் திருக்கே தீச்சரம் என்னும் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தேயுடைய மாதோட்டம் இராஜராஜபுரமென்னும் பெயர் பெற்றது. 

ஜயங்கொண்டான்:

ஜயங்கொண்டான் என்ற விருதுப் பெயரைத் தாங்கி நின்ற நகரங்களுள் தலை சிறந்தது ஜயங்கொண்ட சோழபுரமுாகும். அஃது இராஜராஜன் காலமுதல் சில நூற்றாண்டுகள் சோழ ராஜ்யத்தின் சிறந்த நகரமாக விளங்கிற்று. இப்பொழுது திருச்சி நாட்டு உடையார் பாளைய வட்டத்தில் அஃது ஒரு சிற்றூராக இருக்கிறது.

ஜயங்கொண்ட பட்டணம் என்னும் ஊர் சிதம்பர வட்டத்தில் உள்ளது. ஜயங்கொண்டான் என்ற பெயருடைய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் சில உண்டு. திருச்சி நாட்டைச் சேர்ந்த குளித்தலை வட்டத்திலுள்ள மகாதானபுரத்தின் உட்கிடையாகிய சிற்றூர் பழைய சங்கடம் என்னும் விந்தையான பெயரைக் கொண்டுள்ளது. பழைய ஜயங்கொண்ட சோழபுரம் என்பதே நாளடைவில் பழைய சங்கடமாய் முடிந்தது என்பர். 

ஜனநாத சோழன்:

இராஜராஜனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய ஜனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.

       “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
       அடிதழீஇ நிற்கும் உலகு”

என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி ஜனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராஜராஜன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் ஜனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. 

சிவபாத சேகரன்:

திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெந்கே ஐந்து மைல் அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம் என்பது சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிதைவாகும். அங்குள்ள கோயில் திருவாலீச்சுரம் என்ற பெயருடையதென்பது சாசனத்தால் விளங்கும். 

உய்யக் கொண்டான்:

உய்யக்கொண்டான் என்பது இராஜராஜரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப் பெயர் தமிழ் நாட்டு மலைகளோடும், கால்களோடும் மருவி நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக் கொண்டான் திருமலை என்று பெயர் பெற்றது. இன்னும் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் காவிரியாற்றினின்றும் கிளைத்துச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இம்மன்னன் பெயரையே தாங்கி நிலவுகின்றது.

உலகமாதேவி:

இராஜராஜன் தேவியருள் சிறப்புற்று விளங்கியவள் உலகமாதேவி. அவள் பெயரால் அமைந்த நகரம் தென் ஆர்க்காட்டிலுள்ள உலகமாதேவிபுரம், அவ்வூர்ப் பெயர் ஒலகபுரம் எனவும், ஒலகாபுரம் எனவும் மருவி
வழங்குகின்றது. செங்கற்பட்டு நாட்டிலுள்ள மணிமங்கலம் என்னும் ஊர் உலகமாதேவி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்கள் கூறும். திருவையாற்றுக் கோயிலில் உள்ள உத்தரகைலாசம் என்னும் உலோகாமாதேவீச்சரம் இம் மாதேவியாற் கட்டப்பட்டதாகும். 

திரிபுவன மாதேவி:

திரிபுவன மாதேவி என்பது மற்றொரு தேவியின் பெயர். இவளே   இராஜேந்திரனைப் பெற்ற தாய். புதுவை நாட்டில் உள்ள திரிபுவனி என்னும் ஊர் இவள் பெயர் தாங்கி நிற்பதாகும். அவ்வூரின் பெயர் திரிபுவன
மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதன் சிதைவாகத் தெரிகிறது. 

சோழமாதேவி:

இன்னொரு தேவியாகிய சோழ மாதேவியின் பெயர் தாங்கி நிலவும் உடுமலைப்பேட்டை வட்டத்தில் சோழமாதேவி என்னும் ஊர் ஒன்று உண்டு. அது முற்காலத்தில் சோழமாதேவி நல்லூர் என வழங்கிற் றென்பது சாசனங்களால் அறியப்படும். அங்குள்ள குலசேகர ஈச்சுரம் என்னும் சிவாலயத்திற்கும்,
அதன் அருகே அமைந்த திருமடத்திற்கும் சோழ மன்னர் அளித்த நன்கொடை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.

இராஜராஜ சோழன்:

இராஜராஜனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றான் அவன் மைந்தனாகிய இராஜேந்திரன். தஞ்சைச் சோழர் என்று சொல்லப்படும் இடைகாலத்துப் பெருஞ் சோழ மன்னர் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டு
தலைசிறந்து விளங்கியவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தது. இவன் புகழ், பாரத நாட்டின் எல்லை கடந்து, சிங்களம், கடாரம், மாநக்கவாரம் முதலிய பன்னாடுகளிலும் பரவி நின்றது.

விருதுப்பெயர்கள்:

இம் மன்னன் தான் பெற்ற வெற்றியின் அறிகுறியாகச் சில பட்டப் பெயர்களை மேற்கொண்டான். அவற்றுள் மிகச் சிறந்தவையான முடி கொண்டான். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் விருதுப் பெயர் மூன்றும் ஊர்ப் பெயர்களிலே விளங்குகின்றன. 

முடிகொண்ட சோழன்:

சோழர் ஆட்சியில் அமைந்த கங்கபாடி என்னும் நாடு இவ்வரசன் காலத்தில் முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் பெற்றது.99 பழம் பெருமை வாய்ந்ததும், பாடல் பெற்றதுமாகிய பழயாறை என்ற நகரம்
முடிகொண்ட சோழபுரம் என வழங்கலாயிற்று.100 இந்நகரம் காவிரியினின்றும் பிரிந்து செல்லும் முடிகொண்டான் என்னும் கிளையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாறு முடிகொண்ட சோழப் பேராறு என்று அக்காலத்துச் சாசனங்களில்
குறிக்கப்பட்டது.

இராஜேந்திர சோழன் காலத்தில் எழுந்த திருக்கோயில் என்று கொள்ளலாகும். அவ்வூரில் கோயில் கொண்ட தேசிப் பெருமாள் என்னும் திருமாலுக்குக் காவிரியாற்றின் வட கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும், தென் கரையிலுள்ள பதினெட்டு   ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன. இன்னும் அவ்வூரில் நகரஜினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும் இருந்தது.

கடாரம் கொண்டான்:

கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாஜேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு
மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக வழங்குகின்றது. தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் கடாரங் கொண்ட சோழபுரம் இருந்ததென்று சாசனம் கூறும்.

குலோத்துங்க சோழன்:

இராஜேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை சான்றவன் முதற் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியிற் பாராட்டப்படுகின்ற சிறந்த அரசன் இவனே. கருணாகரத் தொண்டைமான் 
என்னும் படைத்தலைவன் இச் சோழ மன்னனது ஆணையால் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றியும் புகழும் பெற்ற செய்தியைக் கலிங்கத்துப் பரணி எடுத்துரைக்கின்றது. குலோத்துங்கன் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாய பட்டங்களைத் தாங்கி நின்றான். சுங்கந்தவிர்த்த சோழன் என்னும் விருதுப் பெயரும் அவனுக்குரிய தாகும். தஞ்சாவூரின் அருகேயுள்ள கருந்திட்டைக்குடி அம் மன்னன் காலத்தில் சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர் என வழங்கலாயிற்று.

தீன சிந்தாமணி:

இன்னும், குலோத்துங்கன் தேவியாகிய தீன சிந்தாமணியின் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. தென் ஆர்க்காட்டிலுள்ள சிந்தாமணி என்னும் ஊர் முன்னாளில் தீன சிந்தாமணி நல்லூர் என வழங்கிற்று.
எனவே, சிந்தாமணி என்பது அதன் குறுக்கமாகத் தோன்றுகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள கடைக்கோட்டுப் பிரம தேசம், தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று  சாசனங்களிற் குறிக்கப்படுதலால் அவ்வூரும் இத் தேவியின் பெயர் தாங்கி நிற்பதாகத் தெரிகின்றது. 

அநபாய சோழன்:

இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அப் பெயர் சில ஊர்களுக்கு அமைந்தது. சோழ மண்டலத்தில் ஜயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டில் அநபாய புரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று இருந்ததாகச் சாசனம் கூறுகின்றது. தொண்டை நாட்டில் அரும்பாக்கம் என்னும் ஊரில் இருந்த சில நிலங்களை ஓர் எடுப்பாகச் சேர்த்து, அநபாய நல்லூர் என்று பெயரிட்டுத் திரு ஆலக் கோயிலுடையார்க்கு அளித்தான் அநபாய சோழன்.

மூன்றாம் குலோத்துங்கன்:

மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாசனத்தால் தென் ஆர்க்காட்டு வேலூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் விளங்கிற்று என்பது தெரிகின்றது. இம் மன்னன் பெயரால் உண்டாகிய குலோத்துங்க சோழநல்லூர் அத்திருக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்டது.

திரிபுவன வீரன்: 

தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதூருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப் உள்ளது. பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப் பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்ற பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று. அவ்வூரில் சிறந்து விளங்கும்  

பல்லவராயன்: 

இரண்டாம் இராஜராஜன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவராயர் என்பவர் தலைமை அமைச்சராக விளங்கினார். அம் மன்னன் முதுமையுற்றபோது தனக்குப்பின் பட்ட மெய்தி அரசாளுதற்குரிய மைந்தன் இல்லாமையால் மனம் வருந்தினான். அந் நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அவன் மரபைச் சேர்ந்த இளம் பிள்ளையைப் பல்லவராயர் அழைத்து வந்து முடிசூட்டி அரசியற் பொறுப்பனைத்தையும்
வகித்து முறையாகவும் திறமையாகவும் நடத்தினார். 

பரகேசரி:

சிதம்பரத்துக்கு அண்மையில் பரகேசரி நல்லூர் என்னும் ஊர் உள்ளது. பரகேசரிப் பட்டம் உடைய மன்னன் காலத்தில் அஃது உண்டாயிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. அங்கு இருங்கோளன் என்னும் குறுநில மன்னன் கட்டிய கோவில் விக்கிரம சோழேச்சரம் என்று பெயர் பெற்றது.  இப்பொழுது அவ்வூர் பரமேஸ்வர நல்லூர் என்று அழைக்கப்படுகின்றது. 

வானவன் மாதேவி:

வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் தென்ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது. செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் வானவன் மாதேவி என்பது ஓர் ஊர். அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது. பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும். அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.

சாமந்தர்:

 செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது.

தஞ்சைச் சோழ மன்னர் ஆட்சியில் அவர்க்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர் பலர் இருந்தனர். கொங்குராயன், சேதிராயன், மழவராயன், பல்லவராயன் முதலியோர் சாமந்தராய்ச் சோழ நாட்டின் பல பாகங்களைக் கண்காணித்து வந்ததாகத் தெரிகின்றது. தென் ஆர்க்காட்டிலுள்ள கொங்குராய பாளையம், கொங்குராயனூர் முதலிய ஊர்களும், நெல்லை நாட்டிலுள்ள கொங்குராய குறிச்சியும் அக்காலத்திய கொங்குராயர் பெயரை நினைவூட்டுகின்றன.

சோழ மன்னர்களின் சிறப்புப் பட்டங்கள்:

கண்டராதித்தசோழன், அரிஞ்சயசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன்,இராசராசசோழன், இராசேந்திரசோழன்,இரண்டாம் இராசேந்திரசோழன், வீரராசேந்திரசோழன், அதிராசேந்திரசோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் தேவர் என்னும் கள்ளர் பட்டங்களை பூண்டனர்.

முதலாம் இராசராசசோழன் இராசகண்டியன், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற் கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான், முடிகொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழன் உத்தங்கொண்டார், உத்தமுண்டார் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழனின் மகன் சோழகன்ன குச்சிராயன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மதுராந்தக சோழன் சோழங்கர் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ கேரள தேவன், சோழபாண்டியன், கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டிருந்தான்

விக்கிரம சோழன் கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

இராசமகேந்திர சோழன் கொல்லத்தரையன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்