களப்பிரர்கள் என்பவர்கள் தென்னிந்தியாவை ஆண்ட ஒரு மன்னர் பரம்பரையினர் ஆவர். களப்பிரர்கள் தென் இந்தியாவை கி.பி. 250ம் ஆண்டு முதல் கி.பி. 600ம் ஆண்டு வரை சுமார் 350 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர்.
களப்பிரர்கள் தோற்றம்:
களப்பிரர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரையில் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் தமிழகத்தில் தஞ்சாவூரை ஒட்டிய பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர்களின் கல்வெட்டொன்றில், களவன் கள்வன் என்று இருப்பதைக் கொண்டு, களப்பிரர்களின் வம்சத்தில் வந்தவர்கள்தான் முத்தரையர்கள் என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர்கள் எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர்.
கர்நாடகாவில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களுக்கும் கர்நாடகாவிற்கும் தொடர்பு உண்டு என்ற கருத்தும் ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் களப்பிரர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும், உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருதிகின்றனர்.
பெரியபுராணம்:
மூர்த்தி நாயனார் என்பவர் மதுரையில் வாழ்ந்தவர். மூர்த்தி நாயனார் தினம்தோறும் மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்குச் சந்தனக் காப்பு செய்வதற்கான சந்தனத்தை அரைத்து அளித்துவந்தார். அப்போது மதுரையை ஆண்டு வந்த சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மூர்த்தி நாயனாரின் சேவைக்கு இடையூறு செய்தான்.
பெரியபுராணத்தில் உள்ள இந்தக் குறிப்புகள் களப்பிரர்கள் என்பவர்கள் கருநாடக வடுகர் என்றும், சமண சமயத்தவர் என்றும் கூறுகின்றது. மேலும் திருஞான சம்பந்தர் சமணர்களோடு போராடி வென்றதும் இவர்கள் சமண சமயத்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
பெரியபுராணம் 986:
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் -4.1.14
பெரியபுராணம் 983:
கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்
சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான் - 4.1.11
பெரியபுராணம் 984:
வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான் -4.1.12
பெரியபுராணம் 985:
வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் -4.1.13
பெரியபுராணம் 996:
அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல -4.1.24
அகநானூறு:
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
(அகம் – 393)
மாமூலனார் பாடிய அகநானூறு பாடல் ஒன்றில், வேங்கட நாட்டை புல்லி என்ற மன்னன் ஆண்டான். இவன் கள்வர் கோமான் எனக் குறிப்பிடப்படுகிறான். வடுகர்கள் குல்லைப் பூ மாலை சூடியவர்கள். இவர்கள் நாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது கட்டி நாடு. இவை அனைத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது களவர் என்பர் பின்னர் களப்பாளர் ஆயினர் என்று கருதலாம்.
களப்பிரர்களின் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் ஏதும் இதுவரையில் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. களப்பிரர்களின் தோற்றம் ஆண்ட பகுதிகள், தமிழகத்தின் மீது படையெடுத்த காலம், களப்பிரர் மன்னர்கள், போர் புரிந்த மற்ற மன்னர்கள் மற்றும் போரில் பெற்ற வெற்றி, தோல்வி குறித்து எந்த சான்றும் இதுவரையில் கிடைக்கவில்லை.
கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில கருத்துகள் கொண்டுள்ளனர்.
அச்சுத களப்பாளன்:
களப்பிர மன்னர்களில் ஒருவன் அச்சுத களப்பாளன் அல்லது அச்சுத விக்கந்தக் களப்பாளன். இவ்வரசன், போர்களில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே
ஆட்சிப் பகுதிகள்:
களப்பிரர்கள் தமிழகத்தில் மூவேந்தர்களையும் வென்று ஆட்சி புரிந்தனர் என்று நம்பப்படுகிறது. களப்பிரர்களின் ஆட்சியின் கிழ் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், களப்பிரர்கள் கல்வெட்டுக்களைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
மொழி:
களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. களப்பிரர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பாளி மொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர். பாளி மொழியை களப்பிரர்கள் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதே சமயத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆதரவு அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த சமண சமய நூல்களும் பிற பல நூல்களும் பாளி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன.
சமயம்:
களப்பிரர்கள் ஆட்சி காலத்தில் பெளத்த சமயம் மற்றும் ஜைன சமயம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் களப்பிரர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.
களப்பிரர்கள் ஆட்சிக் காலமும், இவர்களது கால படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். களப்பிரர்கள் ஆட்சிக்காலம் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று கருத்து ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது.