சிந்து சமவெளி நாகரிகத்தை போல், மெசொப்பொத்தேமியன் நாகரிகத்தை போல், சீனாவின் நாகரிகத்தை போல் எந்த ஒரு தொன்மையான நாகரிகத்தையும் மங்கோலியா கொண்டிருந்ததில்லை, தொன்மையான பல நாகரிகத்தில் உள்ள பல பிரம்மாண்டமான கட்டிடங்களோ கலைகளோ மங்கோலியாவில் இருந்ததில்லை. துணி நெய்யும் கலையோ, உலோகத்தை கையாளும் அறிவோ, மண் பாண்டங்கள் செய்யும் திறனோ, ஓவியங்கள் வரையும் நிபுணத்துவமோ அவர்களிடம் இருந்ததில்லை. எழுதக்கூட பலருக்கு தெரிந்ததில்லை. இருப்பினும் அத்தனை தொன்மையான நாகரிகங்கள் நிறைந்த பகுதிகளையும் மங்கோலியர்கள் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
சீனா முதல் (பசிபிக் கடல் முதல்) மத்திய தரைக்கடல் கடல் (Mediterranean sea) வரை அவர்களின் ஆட்சி படர்ந்திருந்தது. 400 வருட காலத்தில் ரோமானியர்கள் கைப்பற்றிய பகுதியை விட அதிகமான பகுதிகளை மங்கோலியர்கள் 25 வருடத்தில் கைப்பற்றினார்கள்.
செங்கிஸ் கான் காலத்தில் இன்றைய மங்கோலியா என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளவர்கள் புல்வெளி பழங்குடி மக்களாக (steppe tribe) பல பிரிவுகளாக இருந்தனர். பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும், பெண்ணின் பெற்றோருக்கு ஆண்கள் வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் அங்கு நடைமுறையில் இருந்தது.
ஒவ்வொரு இனமும் ஒருவருக்கொருவர் பெண்ணையும், பொன்னையும் களவாடிய வேளையில், செங்கிஸ் கான் சில புதிய நடைமுறைகளை புகுத்தினார்.
செங்கிஸ் கான் கால் ஊன்றிய காலம் முதல், பெண்களை களவாடும் முறைக்கு தடை விதித்தார். கைப்பற்றிய இனத்தின்/ பகுதியின்/ ராஜ்யத்தின் முக்கிய தலைகளை மட்டும் கொன்றுவிட்டு, ஏனையோரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
பிற தேசத்து பெண்களை தனது தேச மக்கள் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டனர். இதன் மூலம் புதிய உறவுகள் தோன்றியது.
பெரிய நாட்டை/ பகுதியை தன்னுடன் இணைத்த வேளையில், அந்நாட்டின் பெண்களை செங்கிஸ் கான் திருமணம் செய்துகொண்டார்.
தனது குடும்பத்தினருக்கு பதிவிகளை வழங்குவதை விட, தகுதியின் அடிப்படையில் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு பதவிகளை வழங்கினார்.
பிற நாட்டை கைப்பற்றும் வேளையில், ஒவ்வொரு வீரரும் பொருள்களை கொள்ளை அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினர். இதனால் எதிரிகள் தப்பித்து, பின்னர் மீண்டும் தாக்க வந்தனர். ஆனால் செங்கிஸ் கான் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்தார்.
முதலில் எதிரிகளை முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட்டனர், பின்னர் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. எந்த ஒரு போரையும் ஒரு முறைக்கு மேல் புரியக்கூடாது என்பதில் செங்கிஸ் கான் தெளிவாக இருந்தார்.
பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் செங்கிஸ் கானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. தனது பங்கை எடுத்துக்கொண்ட பின், அனைத்தும் சமமாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் மக்களும் படை வீரர்களும் விசுவாசமாக இருந்தனர்.
போரில் இறந்த வீரர்களின் விதவை பெண்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் தனது காலத்திற்கு பின்பும் செங்கிஸ் கான் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வார் என்ற எண்ணம் போர் வீரர்களிடம் ஏற்பட்டது. குடும்பத்தை மறந்து மன்னருக்காக போரிட வீரர்கள் தயாராக இருந்தனர்.
ராணுவ முறை:
10 நபர் = 1 குழு (Squad)
10 குழு = 1 கழகம் (Company)
10 கழகம் = 1 பட்டாளம் (Battalion)
10 பட்டாளம் = 1 டுமேன் (Tumen)
10 நபர் கொண்ட குழுவில் பல இன மக்களை இடம்பெற செய்தார். அவர்கள் ஒன்றாக வசிக்க வேண்டும், ஒன்றாக பயிற்சி பெறவேண்டும், போர் களத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கழகத்திலும், பட்டாளத்திலும், Tumen-யிலும் உள்ள படை வீரர்களின் உறவினர்கள் செங்கிஸ் கானின் கீழ் இருந்த ஒரு Tumen-னில் இருந்தனர். இதனால் மற்ற படை பிரிவுகளில் என்ன நடக்கிறது என்ற விஷயம் செங்கிஸ் கானின் காதுகளுக்கு எளிதில் எட்டியது. ஒவ்வொரு படை வீரரின் உறவினரின் எவரோ ஒருவர் செங்கிஸ் கானின் நேரடி படை பிரிவில் இருப்பதால் வீரர்கள் அனைவரும் ஆளுமைக்கு கட்டுப்பட்டு இருந்தனர்.
மங்கோலிய வீரர்கள் அணியும் ஆடையில், முன் புறம் மட்டுமே அம்பு துளைக்காத வகையில் திடமான மூலப்பொருளால் செய்யப்பட்டிருக்கும், பின் புற ஆடை அம்பு துளைக்கும் வகையில் இலகுவாகவே இருக்கும். எவரும் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பதே காரணம்.
இரவு பொழுதில் மலையில் தங்கும் ஒவ்வொரு படைவீரரும் 5 camp fire ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கமும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் படையின் எண்ணிக்கை மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது. எதிரிகளின் உறுதியையும் குலைக்க உதவியது.
குதிரையும் போர் தந்திரங்களும்:
மனிதர்களை விட மங்கோலியாவில் குதிரைகளே அதிகம் இருந்தது. (ஒரு நபருக்கு சுமார் 10 குதிரைகள்) போரில் குதிரைகளையே மங்கோலியர்கள் பயன்படுத்தினர் என்பது பலர் அறிந்ததே. குதிரைக்கு புல் (உணவு முக்கியம்) ஆதலால் ஒரு நாட்டின் மீது படையெடுக்க போகும் முன், ஒரு சிறு குழு, எதிரி நாட்டின் எல்லை வரை சென்று படையெடுப்புக்கான வழி தடத்தை (புல்வெளி நிறைந்த பகுதிகளாக) தயார் செய்துகொள்வர். திரும்ப வருவதற்கு மற்றொரு வழியையும் ஏற்படுத்திக்கொள்வர். (புல் தான் காரணம்).
காலாட்படை, குதிரைப்படை என்று பல நாடுகள் தனது படைகளை வைத்திருக்கும் வேளையில், மங்கோலியர்கள் குதிரையை மட்டுமே நம்பி இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமான அளவில் உள்ள நாட்டின் மீது படையெடுக்கும் போது, எதிரியை சீண்டிவிட்டு குதிரையில் ஓட ஆரம்பித்துவிடுவர். துரத்தி செல்லும் எதிரியின் குதிரைப்படை, குதிரையின் வேகத்திற்கு ஏற்றவகையில் சிதறி ஓடும், படையின் அடர்த்தி குறையும்.
இத்தனை கவசங்களுடன் (அதிகமான எடையுடன்) எதிரி நாட்டு குதிரையின் வேகம் குறையும், குதிரைகளும் எளிதில் களைப்படையும். வெற்றி உறுதி என்று மங்கோலியர்களை துரத்தி ஓடும் படை, நேரப்போக்கில் எடையை குறைக்க கவசங்களை கழற்றி எரியும்.
முன்னரே போர்க்களத்தை தேர்வு செய்து காத்திருக்கும் மங்கோலிய படைக்குமுன் சிறிது சிறிதாக வந்து சேரும் எதிரிகள் சுலபமாக களையெடுக்கப்படுவர்.
பின்னர் இந்த துரத்தல் பணி திசை மாறும், தோல்வி பயத்தில் கோட்டையை நோக்கி ஓடும் எஞ்சி இருக்கும் படைகளும் துவம்சம் செய்யப்படும். கோட்டையில் குறைவான எண்ணைக்கையில் உள்ள படைகளும் அழிக்கப்பட்டு, ராஜ்ஜியம் மங்கோலியர்களின் கையில் அகப்படும்.
சில சமயம் துரத்தி வரும் படையை அனைத்து திசைகளிலும் மங்கோலியர்கள் முற்றுகை செய்துவிடுவர். மறதியாக ஒரு பாதையை மட்டும் முற்றுகை இட மறந்ததை போல் ஒரு தோற்றத்தை எதிர்க்கு ஏற்படுத்துவர். இதனை பயன்படுத்தி தப்பிக்கும் எதிரிகள் சுலபமாக களையப்படுவர்.
மரக்கோட்டை (மரத்தினால் ஆன கோட்டை):
வழியில் கிடைக்கும் மரங்களை சாய்த்து, அதன் துணையுடன் கோட்டை சுவரை ஒட்டி (அம்பு பாயும் தொலைவுக்கு அப்பால்) உயரமான (மர) சுவரை மங்கோலியர்கள் அமைத்துவிடுவர். சுவருக்கு இந்தப்பக்கம் (மங்கோலியர்கள் பக்கம்) என்ன நடக்கிறது என்பது எதிரி நாட்டுக்கு தெரியாது. சில நாட்களில்/ மாதங்களில் கோட்டையின் உணவு/ நீர் இருப்பு குறைந்து விடும். (அண்டை கிராமங்களை முன்னரே தகர்த்ததால் அந்த கிராம மக்களின் ஜனமும் இந்த கோட்டையில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்). உணவு தட்டுப்பாடுடன் (கிராம மக்கள் கொண்டு சேர்த்த கதை) பீதியும் இணைத்த தருவாயில், நெருப்பு கல் ஏறி குண்டுகளும், புகையை ஏற்படுத்தும் பொருட்களும் கோட்டைக்குள் வீசப்படும் வீசப்படுவதன் மூலம் மேலும் குழப்பம் எழும். இதனை கைப்பற்றி மங்கோலியர்கள் எளிதில் கோட்டையை கைப்பற்றி விடுவார்.
தோற்கும் நாட்டில் தனக்கு தேவையானவர்களை (பொற்கொல்லர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், etc etc) மங்கோலியர்கள் எடுத்துக்கொண்டு, எதற்கும் உதவாதவர்களை, அடிமையகளாக எடுத்துக்கொள்வார், மர கோட்டை அப்புறப்படுத்தப்படும், அடிமைகளின் துணையுடன் அடுத்த போர்க்களத்திற்கு அவைகள் எடுத்துச்செல்லப்படும்.
ஒரு ராஜ்யத்தில் தொடுக்கப்படும் போர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும் (more than 2 front), இதனால் மூன்றவது இடத்தில் உள்ள இளவரசரால் தனது ஆளுமைக்கு உட்பட்ட இடத்தை விட்டு, போர் புரிந்துகொண்டிருக்கும் இரு இளவரசர்களும் உதவி புரியமுடியாது. மீறி சென்றால் மூன்றவது இடம் தாக்கப்படும். இந்த முறையில் எதிரியின் பலத்தை பிரிப்பதன் மூலம் மங்கோலியர்கள் வெற்றி சுலபமாகும்.
செங்கிஸ் கானின் சிறப்பு:
நாடு பிடிப்பதை விட தனது வீரர்களின் உயிரின் மீதே செங்கிஸ் கானுக்கு அதிக அக்கறை இருந்தது. ஒரு சாம்ராஜ்யத்தை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவர தூதர்கள் அனுப்பி வைக்கப்படுவர், இசைந்த நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றுக்கொண்டு மங்கோலியப்படை பாதுகாப்பு அளிக்கும். தூதர்களை கொன்றவர்களை செங்கிஸ் கான் அழிக்காமல் விட்டதில்லை.
சீனா முதல் அராபிய வரை உள்ள பகுதிகளை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்திருந்தாலும், இரு முனைக்கும் இடையே பாதுகாப்பான முறையில் சுமுக வர்த்தகம் ஏற்படும் வழித்தடத்தை (பட்டுப்பாதை) செங்கிஸ் கான் உறுதிப்படுத்தினார்.
பெருட்கள் பல கிடைத்தாலும், குடில் வாழ்கை முறையையே செங்கிஸ் கான் இறுதிவரை வாழ்ந்து வந்தார். உயிருடன் இருக்கும் போது தனக்கென்று ஒரு பிரம்மாண்ட கோட்டையோ, இறந்த பின் ஒரு கல்லறையையோ அவர் அமைத்துக்கொள்ளவில்லை. செங்கிஸ் கான் உறைவிடம் இன்று வரை கண்டறியப்படவில்லை.
சிந்து நதி வரை படை எடுத்து வந்த மங்கோலிய படை, மேலே தொடர முடியாமல் தோற்கடிக்கப்பட்டது. இந்தியாவின் வெப்பம் காரணமாகவும், காற்றில் உள்ள ஈரப்பத்தினாலும் மங்கோலியர்களின் வில் வலுவிழந்தது, அதனால் அம்பின் (இலக்கின்) துல்லியமும் பாதித்தது.