புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
`சித்தன்னவாசல் என்றால் இதற்கு `துறவிகள் இருப்பிடம்' எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது.
பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன. குகைக்கோயில்களையும் - குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான். இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.
மலையின் மேல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ்பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம். மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன. தலை வைத்துக்கொள்ள தலையணைபோல் மேடாகச் செதுக்கிவைத்துள்ளனர். இயற்கையில் அமைந்த தாழ்வாரம் மாதிரி உள்ளது குகை. பாறையில் ஆறு அங்குல ஆழத்துக்கு வழவழப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படுக்கைகளில்தான் சமண முனிவர்கள் படுத்து உறங்கினார்களாம்.
பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது. கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இந்தப் பகுதி `ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
கி.பி.10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு, இங்கு உள்ள கல்வெட்டுகளே ஆதாரம். கோயிலுக்குச் செல்லும் பிரிவு சாலையின் கிழக்குப் பகுதியில் அந்தக் காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் - முதுமக்கள்தாழியும் காணப்படுகின்றன.
மன்னன் குணபரன் ஓவியத்திலும் சிற்பக்கலையிலும் ஈடுபாடுகொண்டிருந்தார். `சித்திரகாரப்புலி' என்னும் பெயரும் இவருக்கு உண்டு. `தட்சிண சித்திரம்' என்னும் ஓவிய நூலுக்கு இவர் உரை எழுதியிருப்பது வரலாறு. குகையின் மேல்புறத்தில் உள்ள ஓவியங்கள் உருவத்திலும் நிறத்திலும் உலகப் புகழ்பெற்றவை. அதிலும் மூன்று ஓவியத் தொகுதிகள்தாம் மிகச் சிறப்பானவை. அரசன், அரசியின் முன்னால் நடனமாடும் பெண்களை இந்த ஓவியங்கள் சித்திரிக்கின்றன.
மன்னன் தலையில் சிறந்த வேலைப்பாடுகள்கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடமும், அவரது கழுத்தில் மணிகள் பதித்த மாலைகளும் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. ராணியின் தலையில் மணிமகுடம் அழகாக வரையப்பட்டுள்ளது. காதுகளில் வளையங்கள் காணப்படுகின்றன. `இருவரும் மகேந்திரவர்மனும் அவருடைய மனைவியும்' என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
பண்டையகால தமிழகம், ஓவியக் கலையிலும் நடனக் கலையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்த சிறப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஓவியங்களைக் கண்ட அப்பர் சுவாமிகள் ‘கைந்நின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே' எனப் பாடியுள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டது. இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடவரைக் கோயிலை (கி.பி.815 - 862) புதுப்பித்திருக்கிறார். “சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள்'' என்று வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தவை என்று தெரியவந்துள்ளது. மேல் விதானத்தில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக்குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டுகளும் சிவன் பக்தர்களாகிய சமணப் பெரியோர்களும் காட்சியளிக்கின்றனர்.
இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வலதுபக்கத் தூணில் நடன மங்கை தனது இடது கையைத் துதிக்கைபோல் வளைத்திருக்கிறாள். இவளது முகம் சோகமாக இருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள், எருமை மாடுகள், யானை என பல உயிர்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று ஓர் ஓவியமும் நம்மை ஈர்க்கிறது. நடுமண்டபத்தை அடுத்து இருப்பது கோயில்.
வலப்பக்கமும் இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணத் தலைவர் சிலையும் உள்ளன. சுவர் ஓவியங்கள் இடைக்காலத்தில் வெளியே தெரியாமல் மறைந்திருந்தன. 1919-ம் ஆண்டில் இதை கண்ட டி.ஏ.கோபிநாத ராயர் என்பவர், புதுச்சேரியில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரரான முயோ தூப்ராய் என்பவருக்குத் தெரிவித்தார். இவர் பல்லவர்கால கலை மற்றும் வரலாற்றை ஆய்வு செய்துவந்தார். அவர் சித்தன்னவாசலுக்கு வந்து, சுவர் ஓவியங்களின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தார். சித்தன்னவாசல், இப்போது சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது