உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000-லிருந்து 8000-வரை இருக்கும் என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். இவற்றுள் சில மொழிகளே எழுதவும் பேசவும் பயன்படுகின்றன. மேலும் வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் அதனிலும் குறைவே! இவற்றிற்கெல்லாம் தாயாகத் திகழ்பவை ஆறு மொழிகள் என்று பகரலாம். அவை கீழ்வருமாறு:
• எபிரேய மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
• கிரேக்க மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
• இலத்தின் மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
• சமஸ்கிருத மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
• தமிழ் மொழி
• சீன மொழி
அவ்வகையில், இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொண்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ் மொழி.
தமிழ் மொழி தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்
அதுமட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம், பிராஞ்சு, இந்தி என பல மொழிகளில் புலமைபெற்றிருந்த முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;
என்று பாடியதும்,
தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்புவாய்ந்தது என்று ஒப்புநோக்க தக்கது.
மேலும், தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப் பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது. உலகிலுள்ள பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்ற கூடிய வகையில் அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல் இருந்தோமனால் நீண்டநாள் வாழலாம் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே தமிழ் மொழியைப் பேசினால் சுவாசக்காற்றை மிச்சப்படுத்தி நீண்டநாள் வாழலாம் என்பது எழுதப்படாத உண்மை!
அடுத்து, தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கையில், திருக்குறளை விட்டுவைக்க முடியாது. இன்று உலகிலேயே அதிகாமான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்றால் அது மிகையாகாது. அறம், பொருள், இன்பம், என்னும் முப்பொருள் உண்மையை உலகிற்கு எடுத்துணர்த்தும் ஒரு பொதுமறையாகவே இது போற்றப்படுகிறது.
ஆறு அறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியினை திருவள்ளுவர் இதில் திட்டவட்டமாக வறையறை செய்துள்ளார். எத்தகைய வாழ்க்கையை வாழ விரும்பினாலும் அவரவருக்கு ஏற்ற வகையில் அறத்தை வடித்துக்கொடுத்துள்ளார்.
• அறத்தை உணரத் தலைபட்டவர்களுக்கு இஃது ஓர் அறநூலாகவும்,
• அரசியலை விரும்புவோர்க்கு ஒரு ஞானநூலாகவும்,
• கவிச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காவியமாகவும்,
• காமச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காமநூலாகவும்,
• வாழ்க்கை நெறியை விரும்புபவர்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் திகழ்கிறது.
இது ஒன்று போதாதா தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு!
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.
உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.
அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.
மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன.
வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.
‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்
‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.
பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது.
தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.
தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.
ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.