கடல் ஏன் நீலமாக இருக்கிறது? பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா? கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த வினா எழுந்தது.
சர் சி வி ராமன் தமிழ்நாட்டின் திருச்சிக்கு அருகே இருக்கும் திருவானைக்காவலில் பிறந்த செல்வம். இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று இந்திய நாளிதழில் தனது அறிவியல் ஆய்வு கட்டுரைகளை பிரசுரித்தது அதன் விளைவாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற நோபல் பரிசு வாங்கிய ஒரே நபர்.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்த தமிழன் தான் அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நபர் மற்றும் முதல் வெள்ளையர் அல்லாத மனிதர். ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி (Transparent Medium) ஊடே நுழையும் போது, ஒளி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. அந்த நிகழ்ச்சி ராமன் விளைவு (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.
சி வி ராமனால் ராமன் விளைவு(Raman Effect) கண்டுபிடிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசால் வருடாவருடம் கொண்டாடப்படுகிறது.
1888 ல் பிறந்த இவருக்கு தந்தை சந்திரசேகரர் இயற்பியல் ஆசிரியர் என்பதால் சிறுவயதிலேயே பல்வேறு அறிவியில் புத்தகங்கள் அறிமுகமாகின. சிறந்த கவனிப்பு ஆற்றல் மற்றும் செறிவோடு படிக்கும் குணம் கொண்ட ராமன் தனது 15 வயதிலேயே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ சிறப்பு தகுதியில் தேர்ச்சி பெற்றார்.
இவரது அறிவாற்றலை கண்டு மகிழ்ந்த ஆசிரியர்கள், வேங்கட ராமன் எல்லா அறிவியல் வகுப்புகளிலும் பங்கு பெற அனுமதித்தனர். குறிப்பாக பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை (Advanced Concepts of Maths & Physics) எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.
லண்டன் சென்று மேற்கல்வி பயிலுமாறு பலரும் அறிவுறுத்தியும் அவருக்கு அதில் உடன்பாடு இல்லை. எனினும் அவர் முயற்சித்த போது அங்கிருந்த பரிசோதனையாளர் இவருக்கு உடல் தகுதி போதவில்லை என்று நிராகரித்து விட்டார். இதை நினைவுகூர்ந்து ஒருமுறை இந்தியாவிலேயே தன்னை ஆய்வு செய்ய உதவிய அவருக்கு நன்றி சொன்னார் சி வி ராமன்.
இவர் உயர் கல்வி மாணவர் என நம்ப மறுக்கும் முன்னமே சாதனை மதிப்பெண்களுடன் எம்.ஏ படித்து முடித்து விட்டார். அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் கல்லூரியில் சிறந்தவராக விளங்கினார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு வேலை மற்றும் அறிவியல் துறை தொடர்பான வேலைகள் அரிதாவே இருந்தன. இதனால் சிவி ராமன் 1907 ல் நிதித்துறையில் தேர்ச்சி பெற்று ஐன்ஸ்டின் போல கணக்காளராக தன் பணிக்காலத்தை கொல்கத்தாவில் துவங்கினார்.
எனினும் அறிவியல் தாகம் அவரை விடவில்லை. கொல்கத்தாவில் அறிவியல் வளர்ச்சி கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். வேலை நேரம் போக மற்ற காலத்தை ஆராய்ச்சி பணிக்காக செலவிட்டார். ராமனின் உற்றுநோக்கும் திறன் வல்லது, மேலும் சிறந்த ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் அவரால் சோதனைகளை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.
ஆரம்பத்தில் இசையில் நாட்டம் கொண்டிருந்ததால் மிருதங்கம், தபேலா கருவிகளின் சுரங்களையும் அதிர்வலையின் கோட்பாடுகளை பற்றியும் கட்டுரை வெளியிட்டார். தன் இறுதி காலம் வரை இசையினுள் புதைந்த இயற்பியல் தேடல் அவரிடம் நீண்டது.
தமிழகத்தில் தங்களது உறவினர் இல்லம் சென்றிருந்த ராமன், தியாகராஜ கீர்த்தனையில் வீணை வாசிக்கும் பெண்ணை கண்ட போது மையல் கொண்டே அவரையே தன் மனைவியாக திருமணம் செய்தார். 13 வயதே நிரம்பிய லோக சுந்தரி அவ்வேளையில் “ராமா நீ சமானம் எவரோ” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தாராம். அந்த காலத்திலேயே தான் விரும்பிய பெண்ணை கட்டிக் கொண்டு புரட்சி செய்திருக்கிறார்.
கல்கத்தா வேலையின் போது பர்மா செல்ல வேண்டிய நிலை கூட வந்தது, அங்கு சென்றும் கிடைத்த உபகரணங்கள் கொண்டு ஆய்வுகளை தொடர்ந்தார். இந்த நிலையில் 1917 ல் அவருக்கு கொல்கத்தால் பல்கலைக்கழகத்தில் (Indian Association for the Cultivation of Science) இயற்பியல் பேராசிரியாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஒரு நிபந்தனையோடு.
“அந்த பணிக்கு இணைபவர் அயல் நாட்டில் பயின்றிருக்க வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தக சி வி ராமனுக்காக அந்த பல்கலை கழக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. பலரும் அறிந்திராத இந்த தகவல் ராமனின் தேச பற்றின் முக்கிய சான்று.”
கதிரியக்கம், அணுக்கள், ஒளி, ஒலி அலைகளின் தாக்கம் என அன்றைய நவீன இயற்பியல் கோட்ப்பாடுகள் எல்லாவற்றையும் ஆராய்ந்தார். தனது ஆய்வறிக்கையை வெளியிட தனி பத்திரிக்கை (Indian Journal of Physics) ஒன்றையும் துவங்கினர். அவரது விஞ்ஞானப் படைப்புகள் நாடெங்கும் புகழ்பெற துவங்கின, முக்கியமாக ஆங்கிலேயர்களிடம்.
1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த விஞ்ஞானப் பேரவையில் பங்கெடுத்துக் கொள்வதற்க மத்திய தரை கடல்வழியாக பயணம் செய்தார். கடல் நீலம் பற்றி வினா எழுந்தது அந்த கணமே. அதுவரை கடலின் மேற்பரப்பில் இருக்கும் துகள்கள் ஒளியை சிதறடிப்பதால் நீலம் எழுகிறது என்ற ஜான் ராலே (John W.S. Rayleigh 1842-1919) கோட்பாடை அவர் ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் ராலே நோபல் பரிசு பெற்றவர்.
இந்த நிகழ்வை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ந்த ராமன் ஒளிச்சிதறலே இதற்கு காரணம் எனவும் அது துகள்களால் அல்ல கடல் நீரில் உள்ள மூலக்கூறுகள்(molecules) என நிரூபணம் செய்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து ஒளிச்சிதறலின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்த ராமன் 1923 ல் ஒளிக்கதிர்கள் ஒரு ஊடகத்தின் வழியே ஊடுருவும் பொழுது அவை சிதறடிக்கப்பட்டு சிதறிய ஒளிக்கற்றைகளின் அலைநீளத்தை அதிகரிக்கிறது. மேலும் அணுவில் உள்ள எலக்ட்ரானுடன் மோதி அவை சக்தியை இழக்கின்றன என கண்டறிந்தார். இவை எல்லாவற்றுக்கும் அவர் மாணவர்கள் உதவி புரிந்தனர்.
முக்கியமாக கே.எஸ்.கிருஷ்ணன் என்பவருடன் இணைந்து இவர் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ராமன் விளைவை கண்டுபிடித்த தருணத்தில் அவர்களை முதலில் கூப்பிட்டு கிரிக்கெட் உதாரணத்தை கொண்டு விளக்கினாராம்.
காம்ப்டன் விளைவு என வழங்கப்படும் இந்த கொள்கையை அதே ஆண்டில் ஆர்தர் காம்ப்டனும் (Arthur Compton) ஆய்வுப்படுத்தினர். ஆனால் அவர் எக்ஸ் ரே கதிர்கள் மட்டுமே அவ்வாறு செயல்படுவதாக சொன்னார். வெர்னர் ஹைஸென்பெர்க் (Werner Heisenberg) 1925 ல் சாதாரண ஒளியும் இத்தைகைய விளைவை உண்டாக்கும் என்றார். ஆனால் அதனை ராமன் முன்னரே ஆய்வறிக்கையாக வெளியிட்டிருந்தார். காம்ப்டனுக்கு கிடைத்த நோபல் பரிசு இந்த விளைவை பற்றி ராமனை மேலும் ஆராய ஊக்குவித்தது.
1928 பிப்ரவரியில் திட திரவம் மற்றும் வாயு என்று வேறுபட்ட கடத்திகளில் ஒற்றை நிற ஒளியை (Monochromatic Light) செலுத்தி ஒளிச்சிதறலை நிகழ்த்தினார். சிதறடைந்த ஒளிக்கற்றைகள் திரவத்தில் தொடர்ச்சினையான பட்டைகளாகவும் காற்றடைந்த ஊடகத்தில் இடம்மாறிய படைகளாகவும் வெளிப்பட்டன. இவையே ராமன் ஒளிநிறப் பட்டைகள் (Raman Spectra) என்று அறியப்படுகிறது.
ஒரு பளிங்கு கடத்தியில் ஒளியை ஊடுருவ செய்யும் போது(Raman Scattering) அவை மூலக்கூறுகளின் சக்தியால் வினைபுரிந்து சிதறிய ஒளி அலைகளின் நீளத்தில் மாற்றம் தருகிறது. மேலும் ஆராயும் போது பல தனிப்பட்ட மெல்லிய கதிர்களும் தென்படும். இந்த புதிய கோடுகள் ராமன் கோடுகள் எனப்பட்டன.
இதன் வழியே ஒரு பொருளின் அணு மூலக்கூறுகளின் தன்மையை கண்டறிய முடியும். ஒளிநிறப் பட்டைகளை கூர்ந்து எலக்ரான் நியுட்ரான் நகர்தலையும் மூலக்கூறுகளின் வடிவமைப்பையும்(Molecular Structure) அறிந்து கொள்ள முடியும். ஒளிச்சிதறலை பற்றிய இந்த அசாத்திய கண்டுபிடிப்பை ராமன் தனது இந்திய பெளத்திக இதழில் வெளியிட்டார்.
அகிலம் வியக்கும் அறிவியலை அவர் இந்திய இதழில் வெளியிட்ட போதும் அவை சர்வதேச புகழுக்கு தானே சென்றது. 1928 இல் இந்திய விஞ்ஞானப் பேரவையின் (Indian Science Congress) தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசு ச வெ ராமனின் விஞ்ஞான அறிவை பாராட்டி இங்கிலாந்து மகாராணி மூலம் 1929 இல் சர் (sir ) பட்டம் அளித்துத் தீரமேதமையாக (Knighthood) அங்கிகாரம் அளித்தது. பன்னாட்டு விஞ்ஞானிகள் குழுவான Fellow of the Royal Society ன் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. ஹூஸ் பதக்கத்தையும் [Hughes Medal of the Royal Society] ராமனுக்குக் கொடுத்தது.
ராமன் விளைவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட அறிவுலகம் அவருக்கு 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவித்து கௌரவப்படுத்தியது. தாகூருக்கு அடுத்து இரண்டாவது இந்தியாராகவும் அறிவியல் துறையில் முதல் ஆசிய கண்டத்தவராகவும் பிரகாசித்தார் ராமன். ராமன் நோபல் பரிசு வழங்குவதற்கு மூன்று மாதங்கள் முன்னமே பயனச்சிட்டுகளை எடுத்து விட்டாராம்.
தனக்கு விருது கிடைக்கும் என்பதில் அத்துணை தெளிவாய் அவர் இருந்தார், அதுபோலவே நிகழ்ந்தது. பிரிட்டிஷ் அரசு சுதந்திரத்தை பற்றி பேசக் கூடாது என சொல்லி அனுப்பியது. மேடை ஏறியதும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடும் வீரர்களுக்கு வணக்கம் சொல்லி தன் உரையை தொடங்கினார் சிவி ராமன்.
1934 இல் பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞானக் கழகத்தில் இயற்பியல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கென சர்வதேச தரத்தில் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட முதல் கழகம் அது. இன்றைய இந்திய விஞ்ஞான வளர்சசியின் அடித்தளம் இதுவென்றால் மிகையல்ல.
இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தையாக விளங்கிய ஹோமி பாபா அவர்கள் ராமனின் குழுவில் பணியாற்றினார். இருவரையுமே நாட்டின் மேம்பாட்டிற்கு மாபெரும் காரியங்களை செய்தவர்கள். அறிவியலில் தொலைநோக்கு பார்வை கொண்ட இவரை போல பல இளம் விஞ்ஞானிகளை நாட்டிற்கு உருவாக்கி தந்தார் ராமன்.
தொடர்ச்சியாக 1934 இல் ஒளிச் சிதறல் மீது ஒலி அலைகள் (Sound Waves on the Scatting of Light), 1940 இல் படிமங்களில் அணுக்களின் அதிர்வுகள் (Vibrations of Atoms in Crystals) என பல்வேறு கண்டுபிடுப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். ராமனுக்கு இந்தியர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் பெரிய நாட்டம் இல்லை.
சர்வதேச தரத்திற்கு இந்திய அறிவியல் பயிற்சியையும் கடடமைப்பையும் உயர்த்த வேண்டுமென்று எண்ணினார். அப்போது இந்திய விஞ்ஞான கழகத்தில்(IIS) தலைவராக ராமன் இருந்தார். புகழ்பெற்ற வெளிநாட்டு அறிஞர்களை இந்திய மண்ணிற்கு கொண்டு வர முயச்சித்தும் நேரம் சரியாக அமையவில்லை.
எக்ஸ் ரே கதிரியக்கத்தை பற்றியான கோட்ப்பாட்டில் ராமனுடன் பெரும் சர்ச்சை கொண்ட விவாதம் கொண்ட ஜெர்மன் விஞ்ஞானி Max பிறந்த, பின்னாளில் நட்பிற்காக ராமனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்தியா வந்தார். ஆனால் தற்காலிகமாக பணிபுரிந்த அவரால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை என வருத்தம் தெருவித்தார். இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்லும் ஆர்வத்தை குறைக்கிறார் என சர்ச்சையாக கூட பேசப்பட்டது.
சுதந்திர இந்தியா 1948 இல் அவருக்காகப் பெங்களூரிலே ஓர் புதிய ஆராய்ச்சிக் கூடத்தைக் (Raman Research Institute) அமைந்தது தந்தது. ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ச.வெ. ராமன் பெங்களூரில் (1970 நவம்பர் 21 ) அவர் காலமாகும் வரை, ராமன் அந்த ஆராய்ச்சிக் கூடத்திலே ஆய்வுகள் புரிந்து வந்தார்.
1950 இல் வைர கற்களில் எழும் ஒளிவீச்சு (Optics in Gemstones), 1960 இல் உயிரியல் விஞ்ஞானத்தில் மனிதக் கண்கள் காணும் பன்னிறக் காட்சி (Physiology of Human Colour Vision) போன்ற பெளதிக அடிப்படைகள்.
• ஒலிவியல் அதிர்வுகள், (Acoustical Vibrations),
• படிமங்களால் எக்ஸ்-ரே கதிர்த் திரிபுகள் (X-Ray Diffraction by Crystals),
• படிமக் கொந்தளிப்பு (Crystal Dynamics),
• படிம உள்ளமைப்பு (Crystal Structure),
• திரவத்தேன் ஒளி ஆய்வு (Optics of Colloids),
• மின்சாரப் பலகுணவியல்/காந்தப்
• பலகுணவியல் (Electric & Magnetic Anisotropy).
• இசைக் கருவிகளின் இசை ஒலியின் பெளதிக இயல்பையும் (Physical Nature of Musical Sounds),
• இசைக் கருவிகளின் இயக்கவியலையும் (Mechanics of Musical Instruments)
ராமன் ஆராய்ச்சி செய்தார்.
ராமன் விளைவை அவர் கண்டிபிடித்த தினத்தை இந்தியா அறிவியல் தினமாக கொண்டாடி மகிழ்விக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான போட்டிகள் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பிர்லா,ஊட்டி தொலைநோக்கி மையங்களில் விழா எடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கொள்கை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2018 ஆம் ஆண்டுக்கான தீம் தீர்க்கமான எதிர்காலத்திற்கான அறிவியல் தொழிற்நுட்ப மேம்பாடு(Science and Technology for a sustainable future).
ராமன் அவரது காலத்தில் கட்டப் பட்ட ஒவ்வோர் இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் நிதி உதவி செய்திருக்கிறார். இந்திய விஞ்ஞானப் படிப்பகத்தைத் (Indian Academy of Sciences) துவங்கி அவர் அதன் தலைவராகவும் பொறுப்பாற்றினார். பர்மா இந்தியர்களுக்கும் கல்வி பயிற்றுவித்துள்ளார்.
நோபல் பரிசு, இங்கிலாந்து மாகாராணியின் Knight பட்டம் மட்டுமின்றி கெளரவ டாக்டர் பட்டங்களையும், விஞ்ஞானப் பேரவைகளில் அதிபர் பதவியையும் அள்ளி தந்தன. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அவர் வாழும் போதே அவருக்கு அளிக்கப்பட்டது.
மேலும் அமைதிக்கான லெனின் விருது வழங்கி ரஷ்ய நாடு ராமனை பெருமைப் படுத்தியது, நல்ல தமிழில் பேசும் அவர் ரஷ்ய மொழியில் நன்றி சொல்ல மிகவும் சிரமப்பட்டாராம். 80 வருடங்கள் ஆகியும் இந்திய அறிவியல் துறையில் அவருக்கு பின் யாரும் நோபல் பரிசு வாங்கவில்லை. சுப்ரமணியம் சந்திரசேகரர்( 1983- Physics ‘ராமனின் உறவு மருமகன்’), ஹர்கோபிந்த்(1968-Medicine), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009-Chemistry) போன்றோர் வாங்கினாலும் இவர்கள் யாவரும் அமெரிக்க குடியிரிமை பெற்றவர்கள்.
ராமன் என்றுமே தந்தது பட்டங்களை தன பெயரோடு சேர்த்துக் கொள்ள விரும்பியதில்லை. விருதுக்கும் புகழுக்கும் அவர் ஆசை கொள்ளவில்லை, வாழும் நாள் வரை சோர்வடையாமல் தந்தது ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டே இருந்தார் ராமன். தமிழ் மண்ணில் பிறந்து இறுதி மூச்சு வரை இந்தியனாவே வாழ்ந்த சந்திரசேகர வேங்கட ராமன் மறந்து விடக்கூடாத ஒரு மாபெரும் சரித்திர நாயகன்