ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை கிராமம்.
1986-87 ல் தொடங்கிய அகழ்வாய்வு பணி ஏழு கட்டமாக நடைபெற்று இதுவரை 12,000 மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மிக சிறிய பகுதியில் நடத்தப்பட்ட இந்த அகழ்வாய்வு, தமிழக அரசின் ஒப்புதலின் பெயரில் இந்த வருடம் மே மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று 59 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
பண்டைய தமிழ் சமூகத்தின் பழந்தன்மையை எடுத்து கூறும் வகையில் அம்மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண் மணிகள், கண்ணாடி, இரும்பு மற்றும் யானைத் தந்தத்தாலான பொருள்கள் வெளிக்கொணர பட்டுள்ளன. மிகப்பெரிய குடுவைகள், விதை சேமிப்பு கலன்கள் மேலும் ஹரப்பா நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்த குறியீடு என்று கருதப்படும் உருவம் பொறித்த தொல்பொருள் ஆதாரம் ஒன்றும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிமு 300 களில் ரோம் உள்ளிட மேற்கு மற்றும் கிழக்கிந்திய மத்திய தரைகடல் நாடுகளுடன் வாணிபம் செய்து சிறப்புறிருந்த காலத்தில் இத்துறைமுக நகரம் மருங்கூர்பட்டிணம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. காவிரிபூம்பட்டினம் போன்று புகழ்பெற்ற வணிக நகரமாக சங்க இலக்கியங்களில் குறிபிடப்பட்டிருக்கும் ‘வையைப் பூம்பட்டினம்’ மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும்.
மருங்கூர்பட்டிணம்,கோட்டைமேடு மற்றும் அதன் அருகாமையில் புதையலாய் மறைந்த ஊணூர் அல்லது சாலியூர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் காணக்கிடைக்கிறது. 2000 ஆண்டிற்கு முன்னரே வணிகம் செய்ததற்கு சான்றாக ரோமானிய கப்பல் சித்திரங்கள், ரவுலட்டேடு எனப்படும் ரோமானிய கலைவடிவ பானைகள், மதுபான குடுவைகள், ஆபரண மணிகள் கிடைத்துள்ளன.
ரோம் பானைகள் பழங்கால தமிழக கருங்சிவப்பு வண்ண பானை வடிவிலிருந்து வேறுபட்டவை. சில பானை ஓடுகளில் சங்க கால தமிழ் பிராமி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற சில ரோமானிய செப்பு நாணயங்களில் அக்கால ரோம பேரரசின் அரசர் இரண்டாம் வாலெண்டைன்( கிமு 375-392) பெயர் பதியப்பட்டிருக்கிறது. இது சங்ககால யவண பயணத்தை நிறுவ ஆவணமாக இருக்கும்.
பண்டைய தமிழகத்திற்கு கடல்பயணம் செய்து வந்த கிரேக்கர்களும் ரோமானியர்களும் யவணர்கள் என்றே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
யவணர்கள் தங்கத்தை கொடுத்து பாண்டிய முத்து, ரத்தின மணிகள், பண்டங்கள், தாழிகள் மற்றும் சேர மிளகு,வாசனை பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். சில யவணர்கள் இங்கு காவலர்களாக கூட பணிபுரிந்துள்ளனர். இத்தாலி-தமிழக தொடர்பை பற்றிய தாலமியின் குறிப்புகள் ரோம் நாட்டின் தங்கம் அனைத்தும் தமிழகம் சென்றடைவதால் ரோமாபுரில் ஏற்பட்ட கொந்தளிப்பை விவரிக்கிறது.
சீனர்கள் இப்பகுதியை தா(பெரிய) பட்டிணம் என்று அழைத்தாக தெரிகிறது. பட்டுப் பாதையின் முக்கிய வணிக தலமாக மருங்கூர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். செம்பவளராணி பதிப்பில் குறிப்பிட்ட பவள ஆலையை போல அழகன்குளத்தில் சங்கு ஆபரணங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
சங்கை பயன்படுத்தி வளையல்கள், அணிகலன்கள் பெருமளவில் தயாரிக்கும் தொழிற்பட்டினமாக இருந்திருக்கிறது இவ்விடம். இதற்கு ஆதாரமாக அறுக்கப்பட்ட சங்கு துண்டுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. ரோமானிய செப்புக் காசுகள்,சீனர்களின் கலைப்பொருள்கள் தாண்டி 5 அடி அளவிலான விதைசேமிப்பு அறைகளில் புதிய ரக விதைகள்.
இந்த அறைகளை ஒவ்வொரு கல்லாக எடுத்து திறக்கலாம், அதேபோல மறுபடியும் உருவாக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும் ரோமானிய வணிக குடியிருப்புகளும் கண்டறியப்படுள்ளன. இன்று கடல் உள்வாங்கிக் கொண்ட வையைப் பூம்பட்டினமும் இல்லை, வற்றிப்போய் கடலில் கலக்க மறந்த வைகையும் அழகன்குளத்தில் இல்லை.
ஆனால் காலத்தால் அழிக்க இயலாத நம் தமிழ் மரபு புதைபடிவமாய் எழுந்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் தொடங்கிய இந்த அகழ்வாய்வு செப்டம்பரில் நிறைவுபெற்று ஆவணங்கள் மக்கள் காட்சிக்கு வைக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. அரிக்கமேடு பற்றி நம்மில் பலரே இன்னும் அறிந்திருக்க வில்லை. கீழடிக்கு பல்வேறு இடையூறுகள்.
இன்றைய இணைய நுட்பம் தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரிய சக்தியாக உள்ளது. எனவே உலகின் தொன்மையான, அழிவுறாத நவீனமாக தமிழினம் வாழ்வதை உலகம் மறுக்க இயலாது. அதுவரை, எதிர்கால சந்ததியினரிடம் உலக வரலாறுகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம்முடைய வரலாற்றை மறவாதிருத்தல் நலம்.