உ.வே.சாமிநாதர் வாழ்க்கை வரலாறு | Life History Of U.V. Saminathar In Tamil.

உ.வே.சாமிநாதையர்: 

சங்க இலக்கியங்களே தமிழின் தொன்மைக்கான ஆதாரத்தளத்தை அளித்தன. தற்போதைய தொல்பொருளியல் ஆய்வுகள் அந்தத் தளத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டு வருகின்றன. புகழுக்குரிய சங்க இலக்கியங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தவர் என்ற மாபெரும் பெருமைக்குரிய பெருந்தகையே உ. வே. சா ஆவார்.

யார் இந்த உ.வே.சாமிநாதர்:

சாமிநாதையர் பிறந்த திருவாரூரில் உள்ள தியராஜர் கோவில்
1855 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி தமிழ்நாடு - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரத்தில், வேங்கட சுப்பையருக்கும் சரஸ்வதி அம்மாளுக்கும் பிறந்த சாமிநாதர், தனது ஆரம்பகால தமிழ்க்கல்வியையும் இசைக்கல்வியையும் சொந்த ஊரிலிருந்த ஆசிரியர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார். 

தமது தமிழ் ஆசானைச் சந்திக்கிறார்..
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை மற்றும் திருவாவடுதுறை சைவ ஆதீனம்
தமது 17 ஆவது வயதில் அவர் தமது வாழ்க்கையையே மாற்றிப் போட்ட தமிழ் ஆசானைச் சந்தித்தார். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அப்போது திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக்கொண்டிருந்தார். 

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகரே அவருக்கு “மகா வித்துவான்” பட்டத்தை வழங்கியிருந்தார். 19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு அதிக நூல்களை யாத்து அளித்த புலவராக மீனாட்சி சுந்தரம்பிள்ளை போற்றப்பட்டார். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள் என எண்ணற்ற இலக்கியங்களை அவர் படைத்திருந்தார். 


குருவிடம் செந்தமிழை முழுமையாக கற்றறிந்தார்:

தமிழறிஞரான மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் சென்று சேர்ந்த சாமிநாதர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளை குருவின் திருவடியில் செலவிட்டு, செந்தமிழை முழுமையாக கற்றறிந்தார். 

திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிவந்தாதி, பழமலைதிருவந்தாதி, திருப்புகலாதிருவந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பிரபந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை குருவின் திருவடியிலிருந்து நன்றாக ஐயம் திரிபறக் கற்றுக் கொண்டார். இறுதிவரை தமது தமிழ் ஆசானிடம் அளப்பரிய பக்தியை சாமிநாதர் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

வறுமையில் வாடிய குடும்பம்:

சாமிநாதரின் குடும்பம் மிகுந்த வறிய நிலையிலிருந்தது. அவரது தந்தையார் புராண விரிவுரைகள் செய்து வந்தார். வறுமையைப் போக்குவதற்காக சிறிது காலம் தம்முடன் இணைந்து புராண விரிவுரை நடத்தி கடன்களை அடைக்கலாம் என்று அவரது தந்தையின் ஆலோசனைக்கு இணங்கிய சாமிநாதர், புராணா விரிவுரை நடத்தி பொருள் ஈட்டினார்.

பின்னர், கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைத்ததும், வறுமை நிலையிலிருந்து அவருடைய குடும்பம் ஓரளவு மீள முடிந்தது. பின்னாளில் சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணிபுரிவதற்கான வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.
முதலாவது பதிப்புப் பணி
பதிப்புப் பணியில் ஈடுபட்டு தமிழன்னையின் கழுத்தில் புதிய ஆரங்களைச் சூட்டும் பணிக்கென்றே பிறந்திருந்த சாமிநாதர், செவ்வந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடத்தைச் சிறப்பித்து ஏற்கனவே புலவர்களால் பாடப்பட்ட 86 செய்யுள்களுடன், தாமும் சில செய்யுள்களை யாத்து, அவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தார். இதுவே அவரது முதலாவது பதிப்புப் பணியாகும்.


உ.வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்:

சாமிநாதையர் எழுதிய உரைகளில் உள்ள சில பக்கங்கள் (மாயூரப் புராணம்)
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதருரை, நன்னூல் சங்கர நமச்சிவாயருரை, தக்கயாகப்பரணி, பாசவதைப் பரணி, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருக்காளத்திநாதருலா, திருப்பூவண நாதருலா, தேவை உலா, மதுரைச் சொக்கநாதருலா, கடம்பர்கோயில் உலா, சங்கரலிங்க உலா, தமிழ்விடுதூது, வண்டுவிடுதூது, தென்றல்விடுதூது, திருவாவடுதுறைக்கோவை, திருமயிலைத் திரிபந்தாதி, கூழை அந்தாதி, பழனிப்பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், தியாகராஜ லீலை.

தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார்:

இவை ஒவ்வொன்றையும் பதிப்பிப்பதற்காக அவர் தனது வாழ்நாளையும் குடும்ப வாழ்வையும் தியாகம் செய்தார். அக்காலத்தில் இந்த இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளிலேயே காணப்பட்டன. ஒவ்வொரு ஓலைச்சுவடிகளும் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலேயே இருந்தன. சாமிநாதர் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து, அந்த ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து, இந்த அரும் பணியைச் செய்தார். சாமிநாதையர் இந்த உலகில் பிறந்திருக்காவிட்டால், தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய நஷ்டம் இவ்வளவு என்று அளந்து சொல்ல முடியாத ஒன்றாகும்.

சிறந்த உரையாசிரியர்:

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தனவும் உரை எழுதி வெளியிட்டனவுமாகிய நூல்களில் தனித்தனிச் சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறார். அவர் சில நூல்களுக்கு அரிய உரை எழுதியுள்ளார். மணிமேகலைக்கும், குறுந்தொகைக்கும் சாமிநாதையர் இயற்றிய உரைகள் அவரை ஒரு சிறந்த உரையாசிரியராக தமிழ் உலகுக்குக் காட்டுகின்றன. மணிமேகலைக்கும் பல இடங்களில் பதவுரையும் இடையிடையே சில அடிகளின் பொருட்சுருக்கத்தையும் காதை இறுதியில் ஒரே சொற்றொடரில், பெரும்பாலும் மூலநூல் சொற்களைக் கொண்டே, அக்காதையின் பொருட் சுருக்கத்தையும் சாமிநாதையர் தந்துள்ளார்.

சாமிநாதையர் எழுதிய 'என் சரித்திரம்' நூல்
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தனது பொய்யுடலை நீத்தார் உ. வே. சாமிநாதையர். எனினும், தனது நிகரற்ற தமிழ்ப் பதிப்புப் பணியால், உலகம் உள்ளவரை அனைவராலும் நினைவுகூறப்படுபவராக அவர் திகழ்கின்றார். “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத” என்று தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு. அது உ. வே. சாமிநாதையருக்கு நன்கு பொருந்தக் கூடியது. தமிழ்கூறும் நல்லுலகிலே, அவர் ஆற்றிவிட்டுச் சென்ற அரும் பணியை முழுமையாக ஆற்றுவதற்கு, அவர் காலத்துக்கு முன்பும் யாரும் இருந்ததில்லை. இனியும் யாரும் இல்லை