உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் சிவஸ்தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இக் கோயில் இந்தியாவில் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும். மேலும் இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னகளில் ஒன்றாகும். தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இக்கோயில் கிபி 10-ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ்பெற்ற சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கி.பி. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பிரமாய் நிற்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது
தீவிர சிவ பக்தனான சோழப் பேரரசன் இராஜராஜ சோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார்.
இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன.
சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன. சோழர்களின் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது
இந்த கோவிலில் “வராகி அம்மன்” சந்நிதி இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனிசந்நிதி இந்த கோவிலில் மட்டுமே இருக்கிறது. இராஜராஜ சோழன் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் இந்த வராகி அம்மனை வணங்கி விட்டு துவக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். இந்தக் கோவிலில் கருவூர் சித்தருக்கு தனி சந்நிதி இருக்கிறது. இராஜராஜ சோழன் இந்த பிரகதீஸ்வர கோவிலை கட்டி சடங்குகளை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தாமல் விலகி விழுந்துகொண்டேயிருந்தது. அப்போது சோழனின் அழைப்பை ஏற்று இங்கு வந்த கருவூரார், சிவன் மீது பதிகங்களை பாடி, இங்கிருந்த ஒரு துஷ்ட சக்தியை அழித்த பின்பு, அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தியதாக வரலாறு கூறுகிறது.
கோவில் கட்டமைப்பு:
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக் கடவுளான சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விஜயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது
கல்வெட்டுக்கள்:
சோழப் பேரரசர் அருண்மொழி வர்மன் கட்டிய இக் கோயிலின் பல இடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனக் கூறுகிறது. நிதித்தேவைகள், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களில் இருந்தும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று.
“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….”
தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன், தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப் பணியாட்களை தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
தஞ்சைப் பெரிய கோயில் சிறப்பு:
இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது. இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜராஜ சோழனின் தமிழ் பற்றும் விளங்கும். கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை இராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும். தமிழகத்தில் இதே அமைப்பிலுள்ள மற்ற கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும். இக்கோயில்கள் அனைத்தும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும்.