தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் | Traditional musical instruments of Tamils.

தமிழர் பயன்படுத்திய பாரம்பர்ய இசைக்கருவிகள் 

ஆதிகால மனிதன் தொட்டு இன்று பிறக்கும் குழந்தை வரைக்கும் இசை என்பது தொப்புள் கொடி பந்தமாக இருந்து வருகின்றது. தமிழர்களுக்கும் இசை என்பது உயிரும் உடம்பும் போன்றது.  தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு தாய் கருவுற்றால் நலுங்குப் பாடல், குழந்தை பிறந்ததும் தாலாட்டுப் பாடல், சிறு வயதில் நிலாப்பாடல், இள வயதில் காதல் பாடல், திருமணத்திற்கு திருமணப் பாடல், மரணமடைந்தால் ஒப்பாரி  என தமிழனின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருந்திருக்கிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் மேல்குறிப்பிட்ட நிகழ்வுப் பாடல்கள் வழக்கத்தில் இல்லாமல் போனாலும், அவ்வப்போது சில நாடகங்களும் திரைப்படங்களும் தமிழ் சார்ந்த இசையை நமக்கு நியாபகப்படுத்துகின்றன.

அவ்வாறு நம் மூதாதையரகள் விட்டுச்சென்ற இசைக்கு அக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகழும் அவை பற்றிய சிறு தொகுப்பு.

யாழ்:

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதுவொரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். ஆதி தமிழனின் இசைக்கருவியாக யாழ், தற்போது முற்றிலுமாக மறைந்ததன் காரணமாக அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. 


பழம்பெரும் இந்த இசை கருவியானது 'கேள்வி' என்ற பெயரையும் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.



பேரிகை: 

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.


தமுக்கு: 

தமுக்கு என்பதும் தகவல் தெரிவிக்க உதவிய ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவியாகும். இது தென்னிந்திய கிராமப்பகுதிகளில் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


முரசு: 

இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.முரசுகளில் வீர முரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகை உண்டு. வீர முரசு போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் முரசு, இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தியாக முரசு என்பது வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு, நியாய முரசு என்பது நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு ஆகும். 


உறுமி மேளம்:

உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.  நாட்டார் தெய்வ வழிபாட்டில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது.

உறுமி இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய இது,  ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த மேளத்தின் முகப்பகுதியை  குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.

பறை:

பறை என்பது பாரம்பரிய தமிழிசைக் கருவியாகும். ‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது.  தனக்கென தனித்த ஒரு பெரும் வரலாற்றைத் கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து எனவும் கருதப்படுகின்றது. 

தோலிசைக் கருவிகளின் தாய் எனவும் தமிழினத்தின் தொன்மையான அடையாளம் எனவும் உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம் எனவும் தனிச்சிறப்புன் அழைக்கப்படுகின்றது இப்பறை.

தவில்:

தவில், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நம் கண்களுக்கு அடிக்கடி தென்படும் ஒரு வைத்திய கருவியாகும். இக்கருவி  தோற்கருவி வகையைச் சார்ந்ததாகும் தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இது  நாதஸ்வர குழுவின் பக்கவாத்திய இசைக்கருவியாக இன்றளவும் உள்ளது. 

இதனை மேள வாத்தியம் என்றும், இராட்சச வாத்தியம் என்றும் அழைப்பர். தற்போது கிளாரினெட், வயலின், மெண்டலின் கருவிகளோடும் சேர்ந்து இசைக்கப்படுகிறது. 


ஊதல் வகைகள்:

உயிர்த்தூம்பு அல்லது கொம்பு எனப்படும் ஊதல் இசைக்கருவி
ஊதும் துளைகளைக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல ஒலிக்கப்படும்.

குறும்பரந்தூம்பு அல்லது கொக்கறை எனப்படும் இது மாட்டின் கொம்பையும் இரும்புக் குழலையும் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். இந்த இசைக் கருவி பெரும்பாலும் கோயில் விழாக்களிலும் அரசாங்க நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககாலாம் முதல் ஊதல் வகைகள் முதன்மையனவைகளாக கருதப்படுகின்ன. அவற்றில் குழல், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்ற ஊதல் இசைக் கருவிகள் அரசாங்க நிகழ்வுகளில் பிரதானமாக  ஒலிக்கப்படுபவையாகும்.

சேமக்கலம்: 

சேமக்கலம் வெண்கலத்தாலான இக்கருவி, கோயில் விழாக்களில் இசைக்கப்பட்டது. பின்னர், திருமாலின் அடியவர்களாகிய தாசர்களைப் போற்றி ஆண்கள் மட்டுமே ஆடும் தாதராட்டம் என்ற நடனத்திலும் இக்கருவி இசைக்கப்பட்டது. மற்றும் மாற சடங்குகளிலும் ஒலிக்கப்படும். தற்போது அந்த வழக்கம் மாறிவந்த நிலையில் ஆங்காங்கே சில மரண சடங்குகளிலும் ஆலயங்களிலும் சேமக்கலம் இசைக்கும் வழக்கம் தொடர்கிறது.

உடுக்கை:

உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். மரத்தால் செய்யப் பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்து காணப்படும். இதை ‘இடைசுருங்கு பறை’ என்றும், ‘துடி’ என்றும் அழைப்பர். தமிழ் பாரம்பரிய நடனமான கரகாட்டத்தை போதும், கிராமிய சமய பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் பயன்பட்டுள்ள இது, இன்றளவும் சில சில கிராமங்களும் பயன்பாட்டில் உள்ளது.