களரிப்பயட்டு - தற்காப்புக் கலைகளின் தாய் | Kalaripayattu - Mother Of Martial Arts

உலகின் முக்கியதுவம் மிக்க பல்வேறு  தற்காப்பு கலைகளுக்கு இதுவே வேராகவும் இருந்தது. ஒரு தற்காப்புக்கலை என்பதை தாண்டி இது ஒரு போர் பயிற்சியாகவும், உடற்பயிற்சியாகவும், ஒழுக்கப்பயிற்சியாகவும் இருக்கின்றது. வரலாற்றின் ஒளியில் களரிப்பயட்டு எனப்படும் சொல்லானது பழந்தமிழ் வார்தைகளான களரி + பயிற்று ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும். களரி என்பது களத்தை(field) குறிக்கும், பயிற்று என்பது பயிற்சி (practice)-யை குறிக்கும். பிற்காலத்தில் இது திரிந்து களரிப்பயட்டு என மாற்றம் கண்டது.

களரி எனும் கலையானது பண்டைய தமிழகம் அதாவது தற்போதைய தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் மிகவும் சரளமாக பழகப்பட்டது. சங்கப்பாடல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களில் களரி குறித்து பாடப்பட்டுள்ளதுவே இதற்கான சான்றாகும். சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரி பயிற்சி தரப்பட்டுள்ளது. கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கமாக மூவேந்தர்களிடையே ஏற்பட்ட பல போர்களின் நிமித்தமாக களரியின் தேவை அதிகரித்து களரி பயிற்சியில் பல நுணுக்கமான விடயங்கள் உட்சேர்க்கப்பட்டன.

பண்டைக்காலத்தில் களரிக்கான போதனைக்கூடமாக விளங்கியவை சாலைகள். இச்சாலைகளுக்கு தலைமை ஏற்றவர்கள் பட்டதிரி எனப்பட்டனர். மாணவர்கள் சட்டர்கள் எனப்பட்டனர். இந்த சாலைகளுக்கு அரசர்கள் நிலங்களை தானமாக வழங்கினர், அதற்கு பிரதிபலனாக சாலைகள் திறமையான சட்டர்களை பயிற்றுவித்து மன்னருக்கு வழங்கவேண்டும். கி.பி 7 ம் நூற்றாண்டில் இருந்து 9 ம் நூற்றாண்டு வரையில் பாண்டியர்களின் தாக்குதல்களால் சேர மன்னர்களான சேரமான் பெருமாள்களின் ஆதிக்கம் கேரளாவில் குறைந்த வண்ணம் வந்தது. இத்தருணத்தில் கேரளாவில் சிற்றரசர்களாக இருந்த நாடுவாழிகள் தனிப்படைகளை பணிக்கு அமர்திக்கொண்டனர்.


இந்த தனிப்படைகளுக்கான போர்ப்பயிற்சியாக களரிப்பயட்டு போதிக்கப்பட்டது. சிற்றரசர்கள் மிகுதியாக இருந்தபடியால் சாலைகளுக்கு கிடைத்த சாலாபோகங்கள் அதிகரித்து வந்தன. ஒரு சாலை இன்னொரு சாலையை விட சிறப்பாக செயலாற்றவேண்டி பல புதிய தாக்குதல் முறைகளை கண்டறிந்தனர். இதுவே களரிப்பயட்டின் பொற்காலம் என நோக்கப்படுகிறது.

சோழராட்சிக்கால கல்வெட்டுகளில் இருந்து சில சாலைகளின் பெயர்களை அறிந்துகொள்ள முடிகிறது. அவை

• காந்தளூர் சாலை (இது இராஜராஜன்1 இன் இரண்டாம் ஆட்சியாண்டில் சோழப்படைகளால் அழிக்கப்பட்டது)

• மூழிக்குளம் சாலை

• பரவூர் சாலை

• திருவல்லவாய் சாலை

• ஸ்ரீ வல்லப பெருஞ்சாலை

• குழிக்களரி

• களரி பயிலப்படும் இடமானது   குழிக்களரி எனப்படும். 

இது நிலமட்டத்தில் இருந்து 3 முதல் 4 அடிகளுக்கு மேல்மண் அகற்றப்பட்ட குழிவான பகுதி. 42 அடிகள் நீளமும் 21 அடிகள் அகலமும் கொண்ட செவ்வக வடிவில் இந்த குழிக்களரி அமைக்கப்பட்டிருக்கும். களரியின் தென்மேற்கு மூலையில் மிகவும் புனிதமான பூத்தாரையும் அதனை ஒட்டி குருதாரையும் அமைந்திருக்கும்.

குழிக்களரி: 

பூத்தாரையானது ஒடுங்கிச்செல்லும் ஏழு அடுக்குகள் கொண்டது. முதல் ஆறு அடிக்கிலும் 3 தீபங்கள் ஏற்றப்பட்டு, தீபங்களை இடையே மலரால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இறுதி அடுக்கில் ஒற்றை விளக்கு எரியும். இந்த ஒவ்வொரு அடுக்கும் களரிப்பயட்டுக்கு உரிய ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரியது

• முதல் அடுக்கு - விக்னேசம்: சக்தி மற்றும் ஆரம்பத்தை குறிக்கும்.

• இரண்டாம் அடுக்கு - சண்டிகம்: பொறுமை மற்றும் முயற்சி.

• மூன்றாம் அடுக்கு - விஷ்ணு: கட்டளையிடும் சக்தி.

• நான்காம் அடுக்கு - வடுசீகம்: நிலை மற்றும் ஆயுத பிரபாகம்.

• ஐந்தாம் அடுக்கு - தடாகுரு: குரு சக்தி மற்றும் பயிற்சி.

• ஆறாம் அடுக்கு - காளி: ஆவேசம் மற்றும் வெளிப்படுதல்.

• ஏழாம் அடுக்கு - வாகீச புருஷன்: குரல் மற்றும் ஓசை.

பூத்தாரைக்கு அருகாக நந்தா விளக்கு (அணையா விளக்கு) எரியும். அதற்கு அருகே குருதாரை எனப்படும் குருக்களை வழிபடும் இடம். குருதாரையில் களரியின் முன்னால் குருக்களின் ஆயுதங்கள் எண்ணெய் பூசி பளபளப்புடன் காட்சிதரும். அவற்றுக்கும் பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எல்லா சட்டர்களும் பூத்தாரை மற்றும் குருதாரையை வணங்கிய பின்னரே பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இது பலகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

பயிற்று / பயட்டு: 

களரிப்பயட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும். அவற்றில் முதல் பயிற்சி முறை மெய்ப்பயட்டு எனப்படும். இதுவும் ஒரு வகை தயாராகும் (warm up) பயிற்சி தான். ஒரு சந்தத்தில் அமைந்த பல சிறிய உடலசைவு முறைகளை ஒன்றாக்கி மெய்ப்பயட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி பயிற்சிகளுக்கு முன்பாக இந்த மெய்ப்பயட்டு பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளப்படும். இது உடலின் தசைகளுக்கு இளக்கத்தை தருவதால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடியும்.

இரண்டாவது நிலை கோல்தாரி பயட்டு:

இங்கு மரத்தால் ஆன ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். சரீரவடி எனப்படும் ஆளுயர மூங்கில் கம்பும், செறுவடி எனப்படும் சிறிய தடியும் முக்கியமான கருவிகளாக இருக்கும். பண்டைய தமிழ் கலையான சிலம்பாட்டதிற்கு இணையாக இதனை வரையறுக்கலாம். மேலும் இந்நிலையில் வாய்ப்பயட்டு எனப்படும் சொற்கட்டளை பயிற்சியும் வழங்கப்படும். இதில் கெட்டுகாரி எனப்படும் கட்டளை தொகுப்புகள் எவ்வாறு கூறப்படும் என்பது கற்பிக்கப்படும்.

மூன்றாவது நிலை அங்கத்தாரி பயட்டு/ஆயுத்தப்பயட்டு:

வெட்டும் முனைகளை கொண்ட கூரிய உலோக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் இதன்போது வழங்கப்படும். ஈட்டி, வாலும் கேடயமும், வேல், சுருள் கத்தியான உறுமி, கதை, கட்டாரி, கொம்பு வடிவிலான ஓட்டம், உலோக பூமரேங்கான வளரி மற்றும் குந்தம் என ஆபத்தான பல ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும்.

இறுதியாக வெறுங்கை எனும் ஆயுதம் அல்லாத சண்டைபயிற்சி:

வர்ம தாக்குதல் முதலிய விசேட தாக்குதல் முறைகள் இதில் பயிற்றுவிக்கப்படும். தாக்குதல் முறைகளின் போது ஒருவர் நிற்கும் நிலை (posture) வடிவு எனப்படும். இந்த வண்டிவுமுறைகள், இயற்கையில் விலங்குகள் நிற்கும் முறையை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. சிம்ஹ(சிங்க) வடிவு, கஜ(யானை) வடிவு, அசுவ(குதிரை) வடிவு, சர்ப்ப(பாம்பு) வடிவு, மயூர(மயில்) வடிவு என பல நிற்றல் நிலைகள் உண்டு. சில நிற்றல் நிலைகளுக்கு என பிரத்தியேக உச்சாடன மந்திரங்களும் உண்டு. குறித்த நிலையில் நின்று அந்நிலைக்குரிய உச்சாடன மந்திரத்தை சொல்லும் போது முழுமையான ஆற்றலுடன் எதிரியை தாக்கலாம். ஒரு நிலையில் இருந்து உடனடியாக வெறுநிலைக்கு மாறுவது கைக்குத்தி பயட்டு எனப்பட்டது.

வெறுங்கை: 

தாக்குதல் முறைகள் மட்டுமின்றி மருத்துவ முறைகளும் களரியில் அடங்கும். மெய்யுழிச்சல் எனப்படும் பிரத்யேக மசாஜிங் முறை விசேடமானது. காலம் தாழ்த்தி களரியில் சேரும் வீரர்களின் உடலில் நெகிழ்வு தன்மையை வருவதற்கு மெய்ப்பயட்டு மட்டும் போதாது என்பதால், விசேச தைலங்களை உடலில் பூசி கால்களால் உடலை நீவி விட்டு தசைகளை இளக்கமடைய செய்வதற்கு இந்த மெய்யுழிச்சல் முறை பயன்படுகிறது. இருந்த போதிலும் தற்காலத்தில் உடல் உபாதைகள், நரம்புகோளாறுகளுக்கு சிகிச்சையாக இந்த மெய்யுழிச்சல் கையாளப்படுகிறது.

வடக்கன்-தெற்கன்: 

களரி கலையை பொறுத்தமட்டில் அவற்றின் பிரயோக முறைகளை கொண்டு இரு வகையாக பிரிக்கலாம். அவை வடக்கன் முறை களரி, தெற்கன் முறை களரி. வடக்கன் முறை களரி அதே களரி முறை. ஆயுதப்பயட்டு இம்முறையில் முதன்மை பெறுகிறது. வடக்கன் முறையில் பயிற்சி பெறுபவர்கள் வாள்பயட்டிலும், உறுமி எனப்படும் சுருள் வாள் வீசுதலிலும் அதிகம் திறன் பெறுவார்கள். 

போர்வீரர்களாக பயிற்சி பெறுவோருக்கு வடக்கன் முறையே போதிக்கப்பட்டது. வடக்கு கேரளாவில் இது பிரசித்தமானது. தெற்கன் முறையானது தமிழ் தந்த குறுமுனியான அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இவரே சிலம்பத்தையும், வர்மத்தையும் உலகிற்கு தந்தார். தெற்கன் முறையில் வெறுங்கை அல்லது அங்கைப்பயட்டு எனப்படும் ஆயுதமில்லாத தாக்குதல்கள் இங்கு முதன்மையானது. படுவர்மம், தொடுவர்மம், நோக்குவர்மம், தட்டுவர்மம், நுனிவர்மம் மெய்தீண்டா வர்மம் முதலிய வர்மதாக்குதல்கள் தெற்கன் முறையின் சிறப்பு. 

தெற்கன் முறை போர்க்குரியதாக இல்லாது ஒரு தற்காப்பு கலையாக காணப்படுகிறது. மேலும் வர்மம் தாக்குதல் முறையாக மட்டுமில்லாது சிகிச்சை முறையாகவும் உள்ளது.  தென்கேரளமான திருவிதாங்கூர் பகுதிகளில் இது வழக்கத்தில் உண்டு.

ஆதிக்கலை:

உலக தற்காப்பு கலைகளில் மிகவும் மூத்த கலையாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்ட கலையாக களரி திகழ்கிறது. களரியின் தாக்கமானது கேரளாவில் கணிசமான அளவு காணக்கிடைக்கிறது. கேரளத்தின் பாரம்பரிய நடன வடிவான கதகளி ஆடுவோர்கள் கண்டிப்பாக களரிப்பயிற்சியை மேற்கொள்வார்கள். களரிப்பயிற்சி அவர்களின் உடலுக்கு தரும் நெகிழ்வுத்தன்மையினால் ஒவ்வொரு அசைவையும் சிறப்பாக செய்வதற்கு முடியுமானதாக இருந்தது. வேலகளி எனப்படும் நாயர் குல வீரர்களின் நாட்டிய வடிவில் களரிப்பயட்டு அதிகமாக செல்வாக்கு தெரிகிறது. 

சோழர்காலத்தில் கேரளாவில் நிலவிய பனயங்களி, சங்ககளி ஆகிய நடன வடிவுகளுக்கும் களரிப்பயட்டு பயிற்சிகள் அத்தியாவசியமாகின்றது.
குங் ஃபூ தமிழரான போதிதர்மர் தெற்கன் களரி முறையில் சிறப்பான தேர்ச்சி அடைந்திருந்தார். அவரின் சீனதேச பிராயணத்தின் விளைவாலேயே சீனதேசத்தின் களரியான குன் ஃபூவும், கராத்தேவும், ஜியூ-ஜுட்ஸு ஆகிய கலைகள் தோற்றம் பெற்றன. அந்நிய நாட்டு அறிஞரான பிலிப் சார்லி என்பவர் தன்னுடைய பல ஆண்டுகால ஆராய்ச்சியின் பின்னர் ‘உடம்பெல்லாம் கண்ணானால்’ (when body becomes all eyes) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இக்கட்டுரையால் களரிப்பயட்டு குறித்த விளக்கம் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பமாகியது.

புத்தெழுச்சி: 

தென்னாடு முழுவதும் புகழ் பெற்று விளங்கிய களரிப்பயட்டுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகள் இந்தியாவின் பிரித்தானிய அரசின் கீழ் நிகழ்த்தப்பட்டது. கி.பி 1792 இல் ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின் பலனாக வடக்கு கேரளமான மலபார் பகுதி பிரித்தானிய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மலபாரில் கடுமையான புரட்சி வெடித்தது. 

இப்புரட்சியானது பழசி ராஜாவின் தலைமையில், நாயர் சாதி வீரர்கள் மற்றும் குறிச்சி இனமக்களின் உதவியுடன் நடந்தது. மலபாரில் நடந்த பரந்தளவிலான களரிப்பயட்டு பயிற்சிகளை கண்டு பிரித்தானியர் அச்சம் கொண்டனர். எனவே ஆயுதங்களை சுமந்து செல்வதற்கு பிரித்தானியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.  இது நாயர்களின் கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கையாக அமைந்தது. நிலைமையை சீர் செய்வதற்கு முழித்து மலபார் பகுதியிலும் இருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர்கள் உணரத்தொடங்கினர். 

சுயராஜ்ஜிய முறைகள்: 

வழக்கொழிந்து பிரித்தானிய பிடியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும் களரிப்பயட்டு தன்னுடைய போர்க்கலை எனும் அடையாளத்தை இழந்தது. நல்லவேளையாக பிரித்தானிய அரசின் கடுமையான சட்டங்களையும் தாண்டி களரிப்பயட்டு ஜீவித்துக்கொண்டு வந்தது. எனினும் முன்னரைப்போல மக்களின் பேராதரவு இருக்கவில்லை. 

அக்னியில் எரிந்துபோன ஃபீனிக்ஸ் பறவையின் சாம்பலில் இருந்து புதிதாய் ஒரு பறவை எழுவது போல, போர்க்கலை என்ற தன்னுடைய அடையாளத்தை எரித்து விட்டு ஒரு தற்காப்புக்கலையாகவும், கதகளி முதலிய ஆட்டவகைகளுக்கான பயிற்சியாகவும் களரி பரிணமித்து கொண்டது. உலக அரங்கில் இன்றைய தினத்தில் களரியானது தற்காப்புக்கலை மற்றும் உடற்பயிற்சியாக பல்வேறுபட்ட மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் இருக்கிறது.